நடிகர் கலாபவன் மணி கொல்லப்பட்டாரா? காட்சியால் சர்ச்சை

Report Print Deepthi Deepthi in இந்தியா

சாலக்குடிக்காரன் சங்ஙாதி என்ற திரைப்படத்தில் நடிகர் கலாபவன் மணி கொல்லப்பட்டதாக காட்சிகள் வருவதால் இதுகுறித்து சிபிஐ அதிகாரிகள் இயக்குனருக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளனர்.

பிரபல மலையாள நடிகர் கலாபவன் மணி கடந்த 2016ம் ஆண்டு மார்ச் 6ம் தேதி மர்மமான முறையில் கொச்சி தனியார் மருத்துவமனையில் இறந்தார்.

அவரது உடலில் விஷ சாராயத்தில் காணப்படும் மெத்தனால் என்ற வேதிப் பொருள் காணப்பட்டதால் அவர் தற்கொலை செய்திருக்கலாம் என்று கருதப்பட்டது.

ஆனால், பின்னர் நடந்த பிரதேச பரிசோதனையில் அவரது உடலில் பூச்சிக் கொல்லி மருந்து கலந்திருப்பது தெரிய வந்தது. இதனால் கலாபவன் மணி விஷம் கொடுத்து கொல்லப்பட்டிருக்கலாம் என்று சந்தேகம் எழுந்தது.

கலாபவன் மணி மரணம் குறித்த போலீஸ் விசாரணையில் முன்னேற்றம் ஏற்படாததால், உயர் நீதிமன்ற உத்தரவுப்படி வழக்கு சிபிஐ வசம் ஒப்படைக்கப்பட்டது.

இந்த நிலையில் கலாபவன் மணியின் சொந்த கதையை மையமாக வைத்து பிரபல இயக்குனர் வினயன் ‘சாலக்குடிக்காரன் சங்ஙாதி’ என்ற பெயரில் சினிமாவை இயக்கினார்.

இந்த படம் கடந்த வாரம் வெளியாகி சூப்பர் ஹிட்டாக ஓடிக்கொண்டிருக்கிறது. இதில் கடைசியில் கலாபவன் மணி கொல்லப்படுவதாக காட்சிகள் வருகிறது.

இதுகுறித்து அறிந்த, சிபிஐ அதிகாரிகள், இதுபற்றி நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்குமாறு கூறி இயக்குனர் வினயனுக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளனர்.

கலாபவன் மணியின் மரணம் குறித்து வினயனுக்கு தெரிந்திருக்கலாம் என்ற சந்தேகத்தின் பேரில் இந்த நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers