11 வயதில் திருமணம்... 15 வயதில் கருக்கலைப்பு! 17 வயதில் விதவையான ஒரு பெண்ணின் கதை

Report Print Deepthi Deepthi in இந்தியா

கர்நாடக மாநிலத்தில் உள்ள Belgaum மாவட்டத்தில் அதிகமான குழந்தை திருமணங்கள் நடைபெறுகின்றன.

அதுவும் குறிப்பாக பெண் குழந்தைகள் பிறந்தால் அவர்களது மாமாவுக்கு தான் மணம் முடித்து வைக்கப்படுகிறார்கள். அப்படி திருமணம் செய்துகொள்ளும் மாமாவின் வயது வித்தியாசம் சிறுமியை விட அதிகம் இருந்தாலும் அதனை பெற்றோர் கண்டுகொள்வதில்லை,

அஞ்சனா என்ற பெண்ணின் வயது தற்போது 18. இவருக்கு 5 வயதிலேயே தனது மாமாவுடன் திருமணம் நடைபெற்றது.

தனது வாழ்க்கையில் நடந்த துயரங்கள் குறித்து அஞ்சனா பகிர்ந்துகொண்டதாவது, அன்று நான் 5 ஆம் வகுப்பு படித்துக்கொண்டிருந்தேன். எனக்கு 11 வயது இருக்கும். எனது அம்மா என்னிடம் வந்து ஆடைகளை கொடுத்து மாற்றிக்கொள் உனக்கு திருமணம் என்றார்.

எனக்கு அவர் சொல்வது புரியவில்லை. நானும் ஆடைகளை மாற்றினேன், வயதான எனது மாமாவுக்கு திருமணம் செய்துவைத்தனர். திருமணத்திற்கு பிறகு பள்ளிக்கு செல்லக்கூடாது என்று என்னை தடுத்துவிட்டனர்.

நான் பலமுறை போராடியும், என்னை பள்ளிக்கு அனுப்ப மறுத்துவிட்டனர். ஆனால் எனது கணவர் என்மீது இரக்கப்பட்டு, பள்ளிக்கு செல்ல அனுமதித்தார். 6 மற்றும் 7 ஆம் வகுப்பினை படித்து முடித்தேன்.

அதன்பிறகு, இரண்டு ஆண்டில் எனக்கு 15 வயது இருக்கும்போது கர்ப்பமானேன், நான் கருவுற்றதை என்னால் அறிந்துகொள்ள முடியவில்லை. எப்படி இருக்க வேண்டும் என்றுகூட தெரியவில்லை. கருவுற்ற இரண்டு மாதங்களில் எனக்கு ரத்தம் வெளியானது. கருக்கலைந்துவிட்டது என்பது எனக்கு தெரியாது.

எனக்கு மாதவிடாய் வந்துவிட்டது என்று நினைத்து கொண்டிருந்தேன். அடுத்த மாதம் தான் எனக்கு கருக்கலைந்த விடயம் எனது பெற்றோருக்கு தெரியவந்தது. இதனைத்தொடர்ந்து சுமார் 6 மாதங்கள் வீட்டில் இருந்தேன்.

பின்னரும் கர்ப்பமான எனக்கு மீண்டும் கருக்கலைந்தது. இதற்கிடையில், எனது பள்ளித்தோழிகளை இடையில் சந்தித்தேன். அவர்கள் எனக்கு நேர்ந்தவை குறித்து ஆசிரியர்களிடம் தெரிவித்துள்ளார்கள்.

இந்த தகவலை அறிந்த ஆசிரியர்கள் எங்களது வீட்டிற்கு பொலிசாருடன் வந்து என்னை பள்ளிக்கு அனுப்ப வேண்டும் என தெரிவித்தனர். ஆனால், பள்ளிக்கு அனுப்பமாட்டோம், வேண்டுமென்றால் அவள் தொலைதூரக்கல்வி வழியாக படிக்க அனுமதிக்கிறோம் என பெற்றோர் தெரிவித்தனர்.

இதனைத்தொடர்ந்து தொலைதூரக்கல்வி மூலம் பத்தாம் வகுப்பை வரை படித்துள்ளேன், எனது கணவர் கடந்த ஆண்டு உடல்நலக்குறைவு காரணமாக உயிரிழந்துவிட்டார். தற்போது எனது அம்மா மற்றும் பாட்டியுடன் வசித்து வருகிறேன் என கூறியுள்ளார்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்