பெற்ற மகன் செய்த துரோகம்: தீக்குளித்து தற்கொலை செய்துகொண்ட வயதான பெற்றோர்

Report Print Arbin Arbin in இந்தியா

அரசு வேலை வாங்கி தருவதாக இளைஞர்கள் பலரிடம் பணம் பெற்று மோசடி செய்த மகனால் பெற்றோர் தற்கொலை செய்துகொண்டுள்ள சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

தமிழகத்தின் கரூர் எல்.ஜி.பி நகரை சேர்ந்தவர் 45 வயதான பாபு. நீதிமன்றத்தில் குமஸ்தாவாக பணியாற்றி விருப்ப ஓய்வு பெற்றுள்ளார்.

இவர் பொதுமக்கள், இளைஞர்கள் பலரிடம், தனக்கு அரசு அதிகாரிகள் பலரை தெரியும் என்றும், அரசு வேலை வாங்கி தருவதாகவும் அதற்கு முன்பணம் தர வேண்டும் என்றும் கூறியுள்ளார்.

அதனை நம்பி, இளைஞர்கள் பலர் அவரிடம் பணம் கொடுத்துள்ளனர். இதன் மூலம் பாபு பலரிடம் கோடிக்கணக்கில் பணம் பெற்றுள்ளார்.

ஆனால் அவர் நீண்ட நாட்களாகியும் வேலை வாங்கி கொடுக்கவில்லை. இதனால் பணம் கொடுத்து ஏமாற்றமடைந்த இளைஞர்கள், பொதுமக்கள் பலர் தங்களுக்குரிய பணத்தை திருப்பி தருமாறு கேட்டு வந்துள்ளனர்.

இந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு வீட்டை விட்டு சென்ற பாபு, அதன்பிறகு வீடு திரும்பவில்லை.

அரசு வேலைக்காக பணம் கொடுத்தவர்கள், தொடர்ந்து பணத்தை கேட்டு வற்புறுத்தி வந்ததால் அவர் தலைமறைவானது தெரிய வந்தது.

இதனிடையே பணத்தை கொடுத்து ஏமாந்த பலர், பாபுவின் பெற்றோர் கஸ்தூரி (60), கவுசல்யா (55) ஆகியோரிடம் பணத்தை திருப்பி தருமாறு கேட்டு வந்துள்ளனர். தொடர்ந்து வற்புறுத்தி வந்ததால் அவர்கள் மனமுடைந்தனர்.

இந்தநிலையில் நேற்று நள்ளிரவில் கஸ்தூரி, கவுசல்யா இருவரும் தங்களது உடலில் மண்எண்ணையை ஊற்றி தீவைத்துக் கொண்டனர்.

அவர்களின் அலறல் சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று தீயை அணைக்க முயன்றனர். ஆனால் அதற்குள் இருவரும் உடல் கருகி சம்பவ இடத்திலேயே இறந்துள்ளனர்.

இச்சம்பவம் தொடர்பில் தகவல் அறிந்ததும் கரூர் டவுன் பொலிசார் சம்பவ இடத்திற்கு சென்று, 2 பேரின் உடல்களை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

பாபுவிடம் பணத்தை கொடுத்து ஏமாந்தவர்கள், பணத்தை கேட்டு வற்புறுத்தி வந்ததால் இருவரும் தீக்குளித்து தற்கொலை செய்தது பொலிசாரின் முதல் கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது. தொடர்ந்து இந்த சம்பவம் குறித்து பொலிசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்