13 வயதில் திருமணம்... கருவுற்ற சிறுமியின் உடல்நிலை பாதிப்பு: நீதிமன்றத்தை நாடிய தாயார்

Report Print Arbin Arbin in இந்தியா

திருமணத்துக்கு பிறகு 13 வயது சிறுமியின் வயிற்றில் வளரும் கருவை கலைக்க கோரிய மனுவை விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம், சிறுமியின் உடல்நிலையை பரிசோதித்து அறிக்கை தாக்கல் செய்யுமாறு பெரம்பலூர் அரசு மருத்துவமனை மருத்துவருக்கு உத்தரவிட்டுள்ளது.

பெரம்பலூர் மாவட்டத்தைச் சேர்ந்த சுந்தரி என்பவரின் 13 வயது மகளுக்கு, ஐந்து மாதங்களுக்கு முன்பு இளைஞர் ஒருவருடன் திருமணம் நடந்தது.

குழந்தை திருமணத்துக்கு அந்த கிராமத்தில் உள்ள பலர் எதிர்ப்பு தெரிவித்த நிலையிலும் திருமணம் நடந்தது.

இந்நிலையில், அந்த சிறுமி கர்ப்பமானார். தற்போது, 12 வார கருவை சுமந்துள்ள அச்சிறுமி உடல்நிலை பாதிக்கப்பட்டதால், பெரம்பலூர் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனைக்கு அவரது தாய் அழைத்துச் சென்றார்.

சிறுமிக்கு சிகிச்சை அளித்த மருத்துவர், குழந்தை திருமணம் பற்றி குழந்தைகள் பாதுகாப்பு மையத்துக்கு தகவல் தெரிவித்தார்.

அதன் அடிப்படையில், பெரம்பலூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் குழந்தை திருமண தடைச் சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டது. சிறுமியின் கணவர் கைது செய்யப்பட்டார்.

இந்நிலையில், சிறுமியின் உடல் நிலை மிகவும் மோசமடைந்து உயிருக்கு ஆபத்தான சூழ்நிலை உள்ளதால், கருவை கலைக்கக்கோரி, சிறுமியின் தாய் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.

இந்த வழக்கு நீதிபதி ஆர்.மகாதேவன் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி, பாதிக்கப்பட்ட சிறுமியின் உடல்நிலை குறித்து பரிசோதித்து நீதிமன்றத்தில் அறிக்கை தாக்கல் செய்யுமாறு பெரம்பலூர் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனை மருத்துவருக்கு உத்தரவிட்டுள்ளார்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers