ராஜீவ் கொலை கைதிகள் விடுதலையில் சிக்கல் நீடிப்பு

Report Print Kavitha in இந்தியா

ராஜீவ் காந்தி கொலைக்குற்றவாளிகள் விடுதலையில் ஆளுநர் முடிவில் தாமதம் நீடிப்பதால் விடுதலையில் சிக்கல் எழுந்துள்ளது.

ராஜீவ் காந்தி கொலைக் குற்றவாளிகளான நளினி, முருகன், சாந்தன், பேரறிவாளன், ராபட் பெயஸ், ரவிச்சந்திரன், ஜெயக்குமார் 7 பேரும் கடந்த 25 ஆண்டுகளுக்கு மேலாக ஜெயிலில் உள்ளனர்.

இவர்களது விடுதலைகுறித்து சமீபத்தில் வெளியான நீதிமன்ற தீர்ப்பில், தமிழக அரசே முடிவெடுக்கலாம் என்றும், ஆளுநருக்கு பரிந்துரை செய்யலாம் எனவும் தெரிவித்தது.

ஆனால் இதுவரை தமிழக ஆளுநர் எந்த முடிவும் எடுக்கவில்லை, இதற்கிடையே ராஜீவ் படுகொலை செய்யப்பட்ட போது உயிரிழந்தவர்களின் குடும்பத்தினர் சுப்ரீம் கோர்ட்டில் ஒரு வழக்கு ஏற்கனவே தொடர்ந்து இருந்தனர்.

அவர்கள் ராஜீவ் கொலை கைதிகள் 7 பேரையும் விடுதலை செய்யக் கூடாது என்று வலியுறுத்தி இருந்தனர்.

இந்த வழக்கு சுப்ரீம் கோர்ட்டில் இன்னமும் நிலுவையில் உள்ளது. இதை சுட்டிக்காட்டிய அவர்கள் இந்த வழக்கு விசாரணை முடியும் வரை கவர்னர் எந்த முடிவும் எடுக்க கூடாது என்று வேண்டுகோள் விடுத்தனர்.

சமீபத்தில் அவர்கள் கவர்னர் பன்வாரிலாலை சந்தித்து இது தொடர்பான மனு அளித்தனர்.

இதன் காரணமாக ராஜீவ் கொலை கைதிகள் 7 பேரும் ஜெயிலில் இருந்து விடுதலையாவது தாமதம் ஆனது, ஆளுநர் என்ன முடிவு எடுப்பார் என்ற எதிர்பார்ப்பு அதிகரித்தது.

இந்த நிலையில் சுப்ரீம் கோர்ட்டில் நிலுவையில் இருக்கும் வழக்கில் தீர்ப்பு வரும்வரை எந்த முடிவும் எடுக்கப்போவதில்லை என கவர்னர் பன்வாரிலால் தீர்மானித்து இருப்பதாக தெரியவந்துள்ளது. இதனால் ராஜீவ் கொலை கைதிகள் விடுதலையில் சிக்கல் நீடித்தப்படி உள்ளது.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்