நிர்மலாதேவி விவகாரத்தில் பெரிய பூதம் ஒளிந்துள்ளது: நக்கீரன் கோபால் பரபரப்பு பேட்டி

Report Print Kabilan in இந்தியா

நேற்று நக்கீரன் கோபால் கைது செய்யப்பட்டு மாலையில் விடுதலையான விடயம் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், நிர்மலாதேவி விவகாரத்தில் பெரிய பூதம் ஒளிந்திருப்பதாக அவர் தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் நேற்று காலை ஆளுநர் மாளிகை கொடுத்த புகாரின் பேரில், நக்கீரன் பத்திரிக்கையின் ஆசிரியர் ஆர்.கோபால் விமான நிலையத்திற்கு வந்தபோது கைது செய்யப்பட்டார்.

அவர் மீது 124 சட்ட விதியின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டதாக கூறப்பட்டது. நக்கீரன் கோபால் மீதான கைது நடவடிக்கைக்கு தலைவர்கள், பத்திரிகையாளர்கள் என பலரும் கண்டனம் தெரிவித்தனர். குறிப்பாக, திருவல்லிக்கேணி காவல்நிலையம் முன்பு வைகோ தர்ணாவில் ஈடுபட்டது பரபரப்பை ஏற்படுத்தியது.

அதனைத் தொடர்ந்து, மாலையில் நக்கீரன் கோபால் விடுதலை செய்யப்பட்டார். இந்நிலையில், மாணவிகளை தவறான பாதைக்கு அழைத்துச் செல்ல முயன்றதாக கைது செய்யப்பட்ட நிர்மலாதேவி விவகாரத்தில் பெரிய ரகசியம் உள்ளதாக நக்கீரன் கோபால் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் கூறுகையில், ‘நாங்கள் ஒவ்வொரு கட்டுரை முடிவிலும், இதுகுறித்து விசாரிக்க ஆளுநர் மாளிகையை தொடர்புகொண்ட போது என்றே குறிப்பிட்டு வருகிறோம்.

நிர்மலாதேவி விவகாரத்திற்கு 5 மாதமாக கவர்னர் மாளிகை பதில் ஏதும் தெரிவிக்கவில்லை. நிர்மலாதேவியின் பிரச்சனை அன்றே திடீரென்று கவர்னர் செய்தியாளர்களை சந்தித்ததே சந்தேகத்தை கிளப்பியது.

இந்த விவகாரத்தில் பெரிய பூதம் ஒளிந்துள்ளது. அதை வெளிக்கொண்டு வரவே நாங்கள் முயற்சி செய்கிறோம்’ என தெரிவித்துள்ளார்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்