பாடகி சின்மயிக்கு ஆதரவு தெரிவிக்கும் கர்நாடக இசைக் கலைஞர்கள்

Report Print Kabilan in இந்தியா

பின்னணி பாடகி சின்மயிக்கு கர்நாடக இசைக் கலைஞர்கள் ஆதரவு தெரிவித்துள்ளனர்.

பிரபல பின்னணி பாடகி சின்மயி கவிஞர் வைரமுத்து மீது பாலியல் ரீதியான புகார் தெரிவித்ததைத் தொடர்ந்து, தமிழகத்தில் #Metoo விவகாரம் பூதாகரமாக வெடித்துள்ளது.

சின்மயியின் புகாருக்கு பல்வேறு தரப்பினரும் தங்களது ஆதரவினை தெரிவித்து வருகின்றனர். வைரமுத்து மீது புகார் தெரிவித்த சின்மயி, கர்நாடக சங்கீத உலகத்திலும் இதுபோன்ற பாலியல் சீண்டல் இருப்பதாக தெரிவித்தார்.

இந்நிலையில், கர்நாடக இசைக் கலைஞர்கள் சின்மயிக்கு ஆதரவு தெரிவித்துள்ளனர். இதுதொடர்பாக, அபினவ் சீதாராமன் என்பவர் தனது ட்விட்டர் பக்கத்தில், தனது கருத்து மற்றும் சின்மயிக்கு ஆதரவு தெரிவிப்பவர்களின் பெயர்களை வெளியிட்டுள்ளார்.

மேலும் அந்த ட்விட்டில் ‘சமூகத்தில் உயர்ந்த இடத்தில் இருப்பவர்கள் கண்ணிய குறைவாக நடந்துகொள்ளும்போது, பாதிக்கப்பட்டவர்கள் அளிக்கும் புகார்களை உரிய முறையில் விசாரிக்க வேண்டியது அவசியம்’ என குறிப்பிடப்பட்டுள்ளது.

அத்துடன், சின்மயி போன்றவர்களுக்கு உலகம் முழுவதும் இருக்கும் கர்நாடக சபாக்களும், கலாச்சார அமைப்புகளும் ஊக்கம் அளிக்க வேண்டும் என்றும், அப்போது தான் கர்நாடக இசை சமூகமும் பாதுகாப்புடன் இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனை சின்மயி தனது ட்விட்டர் பக்கத்தில் இணைத்து, கர்நாடக இசைக் கலைஞர்கள் தனக்கு ஆதரவு தெரிவிப்பதை சுட்டிக் காட்டியுள்ளார்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்