இசைஞானி இளையராஜா விடுத்த எச்சரிக்கை! இறுதி தீர்ப்பு விரைவில் வெளிவரும் என அறிக்கை

Report Print Santhan in இந்தியா

பிரபல இசையமைப்பாளரான இளையராஜா எக்கோ ரெக்கார்டிங் நிறுவனத்துக்கு எதிராக தொடரப்பட்ட வழக்கை சென்னை உயர்நீதிமன்றம் ரத்து செய்துள்ளது.

இதையடுத்து இளையராஜா வெளியிட்டுள்ள அறிக்கையில், கடந்த 2014-ஆம் ஆண்டு எனது பாடல்களை பயன்படுத்த தடை கோரிய வழக்கின்படி இன்றளவும் எனது பாடல்களை பயன்படுத்த நீதிமன்றத்தால் பிறப்பிக்கப்பட்ட தடை செல்லும். அந்த தீர்ப்பில் எந்த மாற்றமும் இல்லை.

அதை மீறுவோர் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும். அந்த வழக்கின் இறுதி தீர்ப்பு கூடிய விரைவில் வெளிவரும்.

2010-ம் ஆண்டு எக்கோ நிறுவனத்தின் மீதும், அதன் உரிமையாளர் மீதும் காவல்நிலையத்தில் புகார் அளித்தேன். சட்டத்துக்கு புறம்பாக என் பாடல்களை விற்பனை செய்வதாக அளித்த புகாரின் அடிப்படையில் பொலிசார் சிடிக்களை பறிமுதல் செய்து வழக்கு பதிவு செய்தனர்.

நேற்று வெளியான தீர்ப்பில் நீதிபதி எக்கோ நிறுவனத்தின் மீதான குற்றவியல் நடவடிக்கையை மட்டுமே ரத்து செய்துள்ளார். எனது காப்புரிமை செல்லாது என அறிவிக்கவில்லை.

இந்த வழக்குக்கும், எனது பாடல்களின் உரிமை மீதான வழக்குக்கும் எந்த தொடர்பும் இல்லை. சில செய்தி நிறுவனங்கள், இளையராஜா பாடல்கள் வழக்கு ரத்து, இளையராஜா காப்புரிமை வழக்கு தள்ளுபடி என தவறான செய்தி வெளியிடுகின்றனர்.

தவறான செய்தி வெளியிடுவோர் மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு மற்றும் நஷ்டஈடு கோரி வழக்கு தொடரப்படும் என்று கூறியுள்ளார்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers