மகனின் திருமணத்திற்கு விசித்திரமாக பத்திரிக்கை அச்சடித்து அசத்திய தந்தை! என்ன எழுதி இருந்தது தெரியுமா?

Report Print Raju Raju in இந்தியா

தனது மகன் திருமணத்துக்கு வருபவர்கள் மொய் வைத்தாக வேண்டும் என திருமண பத்திரிக்கையில் தந்தை ஒருவர் அச்சிட்டிருக்கும் சம்பவம் அரங்கேறியுள்ளது.

கோவை மாவட்டம் கல்லார் எஸ்டேட்டைச் சேர்ந்த மருதமுத்து என்பவர் தான் இந்த விடயத்தை செய்துள்ளார்.

அந்த பத்திரிக்கையில், கடந்த 38 ஆண்டுகளில், நான் தங்களின் இல்லங்களில் பலமுறை சீர்செய்தும், மொய் எழுதியும் உள்ளேன். 1980 முதல் இன்றுவரை, என் குடும்பத்தில் இதுவே முதல் நல்ல காரியம் என்பதால், தாங்கள் பெற்றுக்கொண்ட சீர் அல்லது மொய்யை மொத்தமாகச் செலுத்திவிடுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறேன் என எழுதப்பட்டுள்ளது.

இது குறித்து மருதமுத்து கூறுகையில், எனக்கு மூனு பொண்ணுங்க, ரெண்டு பசங்க. என் சொந்தத்துல நடக்கிற எல்லா நிகழ்ச்சிலயும் கலந்துப்பேன். தவறாம சீர்வரிசையும், மொய்யும் செய்துட்டு இருக்கேன். என்னோட ஒரு பொண்ணு 1990ல இறந்துட்டா. அதுக்கு 140 ரூபாய்தான் கட்ட மொய் (இறப்பு வீட்டில் வைக்கப்படும் மொய்) வந்துச்சு.

என்னோட ரெண்டு பொண்ணுங்க, ஒரு பையன் காதல் திருமணம் செய்ததால் அவங்களுக்கு நான் விழா ஏதும் நடத்தல. இப்ப கல்யாணம் நடந்தது கடைசி பையனுக்கு. இதுதான் என் வீட்ல நடந்த முதல் நிகழ்ச்சி. அதுக்காகத்தான் பத்திரிகைல அப்படி சொல்லிருந்தோம்.

மண்டபம், சாப்பாடுனு எல்லாத்துக்கும் சேர்த்து ஒரு லட்ச ரூபாய்க்கு மேல செலவாய்டுச்சு. நான் இதுவரை 5 லட்ச ரூபாய்க்கு மேல மொய் வெச்சிருக்கேன். ஆனா, எங்களுக்கு 75 ஆயிரம் ரூபாய் தான் மொய் வந்துள்ளது என கூறியுள்ளார்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்