திருமணம் முடிந்த கையோடு மணக்கோலத்தில் தேர்வு எழுதிய இளம்பெண்! சுவாரஸ்ய சம்பவம்

Report Print Kabilan in இந்தியா
170Shares

இந்தியாவின் கர்நாடக மாநிலத்தில் மணப்பெண் ஒருவர், திருமணம் முடிந்த கையோடு தேர்வு எழுதிய சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கர்நாடக மாநிலம் ஹாசன் மாவட்டம் கண்டசி கிராமத்தைச் சேர்ந்தவர் நவீன்(25). இவருக்கும் அதே பகுதியைச் சேர்ந்த சுவேதா(20) என்ற இளம்பெண்ணுக்கும், கடந்த மே மாதம் 6ஆம் திகதி திருமணம் நிச்சயிக்கப்பட்டது.

அதனைத் தொடர்ந்து நவம்பர் 3ஆம் திகதி திருமணம் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டு, அன்றைய தினம் இடைத்தேர்தல் என்பதால் நவம்பர் 18ஆம் திகதியன்று திருமணம் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டது. ஆனால், சுவேதாவுக்கு அன்றைய தினமே கல்லூரி இறுதியாண்டு தேர்வு இருந்தது.

பி.காம் படித்து வந்த சுவேதா, திருமண நாளன்றே தேர்வு இருப்பதை அறிந்து வருத்தமடைந்தார். அதன் பின்னர் இதுகுறித்து தனது வருங்கால கணவர் நவீன் மற்றும் அவரது குடும்பத்தினரிடம் சுவேதா தெரிவித்துள்ளார்.

அதனைத் தொடர்ந்து சுவேதாவுக்கு ஆறுதல் கூறிய மணமகன் குடும்பத்தார் நன்றாக படிக்கும்படியும், தேர்வை கண்டிப்பாக தாங்கள் எழுத வைப்பதாகவும் அவர்கள் தெரிவித்தனர்.

இந்நிலையில், நேற்றைய தினம் திட்டமிட்டபடி காலை 7.45 மணியில் இருந்து 8.45 மணிக்குள் நவீன்-சுவேதாவுக்கு திருமணம் நடைபெற்றது. விரைவாக திருமண சடங்குகளும் முடிக்கப்பட்டு, சுவேதா மணக்கோலத்திலேயே கல்லூரிக்கு சென்றார். அங்கு அவர் தேர்வு எழுதிவிட்டு வெளியில் வரும் வரை மணமகன் நவீன் மற்றும் குடும்பத்தினர் அங்கேயே காத்திருந்தனர்.

இச்சம்பவத்தைப் பார்த்தவர்கள் நெகிழ்ச்சியுடன் மணமகளுக்கு வாழ்த்துக்களை தெரிவித்தனர். அதன் பின்னர், சுவேதா உறவினர்களை சந்தித்து வாழ்த்துக்களைப் பெற்றுக் கொண்டார்.

இந்நிலையில் மணப்பெண் சுவேதா நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறுகையில், ‘இது எனக்கு ஒரு புது அனுபவமாகவும், ஆச்சர்யமாகவும் அமைந்தது. என் வாழ்க்கையில் நடந்த ஓர் அதிசயம் இது. இந்த தேர்வை நான் எழுதவில்லை என்றால் மனதளவில் மிகவும் வருத்தம் அடைந்திருப்பேன்.

ஆனால், எனக்கு எனது கணவரும், அவருடைய குடும்பத்தினரும் மிகவும் ஒத்துழைப்பு தந்தனர். அவர்களால்தான் இந்த தேர்வை நான் மன நிம்மதியோடு எழுத முடிந்தது. கண்டிப்பாக நான் தேர்வில் தேர்ச்சி பெற்றுவிடுவேன். நான் தேர்வு எழுத உறுதுணையாக இருந்த என் கணவர் மற்றும் அவருடைய குடும்பத்தினருக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்’என தெரிவித்துள்ளார்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்