2000-ம் ஆண்டு பிப்ரவரி 2 ஆம் திகதி கொடைக்கானல் பிளசண்ட் ஸ்டே ஹோட்டலின் ஊழல் வழக்கில் உச்சநீதிமன்றம், முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவுக்கு ஒரு வருடம் சிறை தண்டனை வழங்கி, கைது செய்யுமாறு தீர்ப்பு வழங்கியது
அப்போது இந்த தீர்ப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து அதிமுகவினர் பல இடங்களில் ஆர்ப்பாட்டத்திலும் வன்முறையிலும் ஈடுபட்டனர்.
அதில் உச்சகட்ட வன்முறையாக தர்மபுரி பேருந்து எரிப்பு சம்பவம் நடந்தது. தருமபுரி, பாரதிபுரம் எனும் இடத்தில அதிமுகவினர், அரசுக்கு சொந்தமான கோவை வேளாண் பல்கலைக்கழகத்தின் மாணவிகள் பேருந்தை பெட்ரோல் ஊற்றி கொளுத்தினர்.
அதில் கோகிலவாணி, காயத்ரி மற்றும் ஹேமலதா எனும் மூன்று மாணவிகள் பேருந்தினுள்ளே தீயில் கருகி உயிரிழ்ந்தனர்.
அந்த வழக்கில் கைது செய்யப்பட்ட முனியப்பன், நெடுஞ்செழியன் மற்றும் மது என்கிற ரவீந்திரன் மூன்று பேரும் தண்டனை பெற்று வேலூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டிருந்தனர்.
ஆனால், இன்று யாரும் எதிர்பாராமல், எந்த ஒரு முன் அறிவிப்புமின்றி தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் ஒப்புதலுடன் தமிழக அரசு ரகசியமாக விடுதலை செய்துள்ளது.
ரகசியமாக விடுதலை செய்யப்பட்டது ஏன்?
எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழாவைக் காரணம் காட்டி 10 ஆண்டுகளுக்கும் மேலாக சிறைத்தண்டனை அனுபவிக்கும் நன்னடத்தை கைதிகளை விடுதலை செய்ய தமிழக அரசு முடிவு செய்தது.
தர்மபுரி பேருந்து எரிப்பு குற்றவாளிகள் மூவரையும் விடுதலை செய்ய ஆளுநருக்குத் தமிழக அரசு பரிந்துரை செய்தது.
விடுதலைப் பரிந்துரையை ஆளுநர் முதலில் ஏற்கவில்லை. பேருந்து எரிப்பு திட்டமிட்டு நடக்கவில்லை. உணர்ச்சி வசப்பட்டு நடந்தது என்று ஆளுநருக்குத் தமிழக அரசு மீண்டும் பரிந்துரைத்தது.
இதையடுத்து, தர்மபுரி பேருந்து எரிப்பு குற்றவாளிகள் மூவரையும் விடுதலை செய்ய ஆளுநர் ஒப்புதல் அளித்தார்.
சிறைக்குள் ஆட்டோ வரவழைக்கப்பட்டது. யாருக்கும் தெரியாமல் ரகசியமாக மூவரையும் சிறைத்துறை அதிகாரிகள் வழி அனுப்பி வைத்தனர்.
ரகசியமாக பேக்ஸ் அனுப்பப்பட்டு, அதில் most immediate என குறிப்பிடப்பட்டிருந்தது. இவர்களை விடுதலை செய்வது குறித்து, அவர்களது குடும்பத்தினருக்கே தெரிவிக்கப்படவில்லை.
இவர்களை விடுதலை செய்யும் தகவல் கசிந்தால், பல்வேறு அமைப்புகள், கொல்லப்பட்ட மாணவிகளின் உறவினர்கள் சிறைக்கு முன்பு திரண்டுவிடுவார்கள். விடுதலையாகும் மூவருக்கும் பாதுகாப்பு இல்லாத சூழல் ஏற்படும். ரகசியம் காக்க வேண்டும் என்பது மேலிட உத்தரவு.
இந்தத் திட்டத்தில் கொஞ்சம் இடையூறு ஏற்பட்டாலும் பிரச்னை என்று சிறைக்காவலர்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டு, இப்படி ரகசியமாக விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.
தமிழக அரசின் இந்த செயல் பல்வேறு அமைப்புகளை கோபமடைய செய்துள்ளது.