மௌன மொழி பேசிய காதல்.. பெற்றோரின் எதிர்ப்பை மீறி திருமணத்தில் இணைந்த ஜோடி

Report Print Kabilan in இந்தியா

தமிழகத்தின் திருநெல்வேலி மாவட்டத்தில் வாய் பேச முடியாத காதல் ஜோடி, பெற்றோரின் எதிர்ப்பை மீறி திருமண பந்தத்தில் இணைந்துள்ளனர்.

திருநெல்வேலி மாவட்டம் புளியங்குடியைச் சேர்ந்தவர் சேவியர் செல்வம். இவருக்கும் மதுரை மாவட்டம் வாடிப்பட்டியைச் சேர்ந்த வைஷ்ணவி என்ற பெண்ணுக்கும், கடந்த 2 மாதங்களுக்கு முன்னர் திருமணம் நிச்சயம் ஆனது.

இவர்கள் இருவரும் வாய் பேச முடியாதவர்கள் என்று கூறப்படுகிறது. இந்நிலையில், இவர்கள் இருவரும் வெவ்வேறு சமூகத்தைச் சேர்ந்தவர்கள் என்று தெரிந்த பின்னர், இருவரின் உறவினர்களும் திருமணத்திற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

இதன் காரணமாக நிச்சயதார்த்தத்துடன் இவர்களின் திருமணம் நின்று போனது. எனினும் சேவியர் செல்வத்திற்கு, வைஷ்ணவிக்கு ஒருவரையொருவர் பிடித்து விட்டதால் இருவரும் திருமணம் செய்துகொள்ள முடிவெடுத்துள்ளனர்.

அதன்படி, யாருக்கும் தெரிவிக்காமல் தூரத்து உறவினர் ஒருவரது வீட்டில் இந்த ஜோடி தஞ்சமடைந்தது. அதனைத் தொடர்ந்து நண்பர்களின் உதவியுடன் கிறித்துவ முறைப்படி திருமணம் செய்துகொண்ட இவர்கள், அத்துடன் தங்களது திருமணத்தை முறைப்படி பதிவு செய்து கொண்டனர்.

இந்நிலையில், பெண்ணை காணவில்லை என வைஷ்ணவியின் தரப்பில் புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன் பேரில் சேவியர் செல்வம்-வைஷ்ணவியை வரவழைத்து பொலிசார் விசாரணை மேற்கொண்டனர்.

அப்போது அவர்கள் தங்களுக்கு திருமணமான ஆவணத்தை பொலிசாரிடம் காட்டினர். அதன் பின்னர், பொலிசார் இரு வீட்டாரிடமும் பேசி சமாதானப்படுத்தியதைத் தொடர்ந்து, திருமண ஜோடியை ஏற்றுக்கொண்டனர்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்