ஆசையாக வளர்த்த மகள்களுக்கு நேர்ந்த துயரம்: தினமும் நினைவிடத்திற்கு சென்று கதறி அழும் தந்தையின் சோகப் பின்னணி

Report Print Santhan in இந்தியா

இந்தியாவில் பேருந்து கவிழ்ந்த விபத்தில் பலியான 2 சிறுமிகளின் நினைவிடத்திற்கு சென்று அவரது தந்தை தினமும் கதறி அழுகும் காட்சி பார்ப்போரை கண்கலங்க வைத்துள்ளது.

கர்நாடகாவின் மண்டியா மாவட்டம் ஸ்ரீரங்கப்பட்டணா தாலுகாவைச் சேர்ந்தவர்கள் கல்பனா (6), சவுமியா (4). சகோதரிகளான இருவரையும், கடந்த வாரம் இவர்களின் பாட்டி ஜெயம்மா(55) கன்கனமரடி கிராமத்திற்கு அழைத்து செல்ல முடிவு செய்தார்.

இதனால் கடந்த 24-ஆம் திகதி தனியார் பேருந்தில் பேத்திகளுடன் ஜெயம்மா பயணம் செய்தார். அந்த தனியார் பஸ் பாண்டவபுரா தாலுகா கனகனமரடி கிராமத்தின் அருகே சென்ற போது, திடீரென்று தறிக்கெட்டு ஓடி அருகிலிருந்த காவிரி பாசன கால்வாய்க்குள் பாய்ந்தது.

இந்த விபத்தில் ஜெயம்மா, கல்பனா, சவுமியா உள்பட 30 பேர் பரிதாபமாக பலியாகினர்.

இந்த சம்பவம் கர்நாடகாவையே உலுக்கியது.

இந்நிலையில் விபத்தில் பலியான கல்பனா, சவுமியா ஆகியோரது உடல்கள் அவர்களின் கிராமமான கோடிஷெட்டிபுராவில் அடக்கம் செய்யப்பட்டது.

மகள்களின் பிரிவை தாங்க முடியாமல் தாயும், தந்தையும் தினமும் அழுதபடி உள்ளனர். அவர்களுக்கு குடும்பத்தினர் மற்றும் உறவினர்கள் ஆறுதல் கூறினாலும், அவர்களால் குழந்தைகளை நினைக்காமல் இருக்க முடியவில்லை.

2 குழந்தைகளையும் விபத்தில் பலிகொடுத்த தந்தை தினமும் தனது மகள்களின் உடல்கள் அடக்கம் செய்யப்பட்ட இடத்திற்கு சென்று கண்ணீர் விட்டு கதறியபடி இருந்து வருகிறார். அவரை உறவினர்கள் ஆறுதல் கூறி அழைத்துச் சென்றாலும், மீண்டும் அவர் மகள்களின் நினைவிடத்திற்கு சென்று, கதறி அழுது வருகிறார்.

மகள்களின் நினைவிடத்திற்கு சென்று கதறி அழும் அவரின் புகைப்படம் சமூகவலைத்தளங்களில் வெளியாகி பார்ப்போரை கண்கலங்க வைக்கிறது.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்