தயவு செய்து இப்படி திருமணம் செய்து கொள்ளாதீங்க.. தற்கொலை செய்து கொண்ட பெண்ணின் உருக்கமான கடிதம்

Report Print Santhan in இந்தியா

இந்தியாவில் கணவர் ஆணவக் கொலை செய்யப்பட்டதால், மனம் உடைந்த பெண் பெற்றோரை எதிர்த்து திருமணம் செய்துகொள்ளாதீர்கள் என்று கடிதம் எழுதி வைத்துவிட்டு தூக்குப் போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பெங்களூரு தேவன்ஹள்ளி தாலுகாவின் பிதனூரு கிராமத்தைச் சேர்ந்தவர் ஹரீஷ் (27). டிரைவரான இவரும் நல்லூர் பகுதியைச் சேர்ந்த மீனாட்சி(25) என்ற பெண்ணும் காதலித்து வந்தனர்.

இருவரும் வெவ்வேறு ஜாதியைச் சேர்ந்தவர்கள் என்பதால், இவர்களின் காதலுக்கு மீனாட்டி வீட்டில் இருந்து கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது.

இதனால் இருவரும் கடந்த 8 மாதங்களுக்கு முன்பு வீட்டை விட்டு வெளியேறி திருமணம் செய்து கொண்டனர். இதையடுத்து கடந்த நவம்பர் மாதம் 21-ஆம் திகதி ஹரீஷ் மீனாட்சியின் சகோதரர் வினய்யால் கொலை செய்யப்பட்டார்.

பொலிசார் வினய்யை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வந்தனர்.

இந்த ஆணவக் கொலை பெங்களூரு புறநகர் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. ஹரீஷ் கொலை செய்யப்பட்ட பின்பு பிதனூரு கிராமத்தில் உள்ள கணவர் வீட்டிலேயே மீனாட்சி வசித்து வந்தார்.

இந்நிலையில், நேற்று காலையில் வீட்டில் யாரும் இல்லாத போது திடீரென்று மீனாட்சி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

இதைக் கண்ட அக்கம்ப்பக்கத்தினர் உடனடியாக பொலிசாருக்கு தகவல் கொடுத்தனர். விரைந்து வந்த பொலிசார் அவரின் உடலைக் கைப்பற்றி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

அதன் பின் அவருடைய வீட்டை சோதனை செய்த போது கடிதம் ஒன்று சிக்கியுள்ளது. நான் காதலித்து பெற்றோர் சம்மதம் இல்லாமல் திருமணம் செய்ததால், கணவரை இழந்து விட்டேன்.

இனிமேல் இந்த உலகத்தில் என்னால் வாழ முடியாது. எனது சாவுக்கு நானே காரணம். வேறு யாரும் காரணமில்லை. எனக்கு நேர்ந்த கொடுமை யாருக்கும் நடக்ககூடாது.

காதலிப்பவர்கள் தங்களது பெற்றோர் சம்மதத்துடன் திருமணம் செய்யுங்கள் கண்ணீர் மல்க உருக்கத்துடன் எழுதியுள்ளார்.

மேலும் இது குறித்து விஸ்வநாதபுரா பொலிசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்