வெளியூரிலிருந்து தமிழகத்துக்கு தனியாக வந்த நபர்: தவித்து போன குடும்பம்... 2 ஆண்டுகளுக்கு பின்னர் நடந்த அதிசயம்

Report Print Raju Raju in இந்தியா

இந்தியாவின் வடமாநிலத்திலிருந்து தவறுதலாக தமிழகத்துக்கு வந்த நபர் இரண்டரை ஆண்டுகளுக்கு பின்னர் குடும்பத்துடன் சேர்ந்துள்ளார்.

ராஜஸ்தான் மாநிலத்தின் ஆல்வார் மாவட்டத்தைச் சேர்ந்தவர் ஜாகிர் (40). இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு, ராஜஸ்தானில் ரயில் ஏறிய அவர் தவறுதலாக தமிழகம் வந்து சேர்ந்ததாகக் கூறப்படுகிறது.

இதையடுத்து காஞ்சிபுரம் மாவட்டம் உத்திரமேரூர் அருகே சுற்றித் திரிந்த அவரை, குழந்தைகளைக் கடத்த வந்திருப்பதாகக் கருதி சிலர் தாக்க முயன்றனர்.

அவர்களிடமிருந்து மீட்ட காவல்துறையினர் சென்னை கீழ்ப்பாக்கம் மனநல மருத்துவமனையில் ஜாகிரை சேர்த்தனர்.

அங்குச் சிகிச்சை முடிந்து இரண்டரை ஆண்டுகளுக்குப் பிறகு அவரது உறவினருடன் ஒப்படைத்திருக்கின்றனர்.

இது குறித்து கீழ்பாக்கம் மனநல காப்பக இயக்குனர் பூர்ண சந்திரிகா கூறுகையில், ஜாகிர் பிறவியிலேயே சிறிய அளவில் மனவளர்ச்சிக் குன்றியவர். அவரால் வழக்கமாகச் செய்யும் வேலைகளைச் செய்யமுடியும்.

எனவே, அவர் தனது சொந்த ஊரில் உள்ள ஒரு கறிக்கடையில் உதவியாளராக வேலைபார்த்து வந்தார். ஒருநாள் ஜெய்ப்பூர் ரயில் நிலையம் சென்றவர், தவறுதலாகத் தென் மாநிலத்துக்குச் செல்லும் ரயிலில் ஏறிவிட்டார்.

படிப்பறிவு இல்லாததாலும், உருது மொழியைத் தவிர பிற மொழிகள் தெரியாததாலும் இரண்டு ஆண்டுகள் ஆங்காங்கே அலைந்து திரிந்து கடைசியாகக் காஞ்சிபுரம் வந்து சேர்ந்திருக்கிறார்.

அவர் இஸ்லாமியர் என்பதால் உருது மொழி அவருக்குத் தெரிந்திருக்கலாம் என்று ஹிந்தி, உருது மொழி பேசத்தெரிந்த மருத்துவர்கள் மூலம் பேச முற்பட்டோம். ஆனால் அப்போதும் ஒரு சிரமம் ஏற்பட்டது.

அவருக்கு உருது பேசத் தெரிந்தாலும் தன்னுடைய ஊர், குடும்ப விவரம், முகவரி என எதுவுமே அவருக்குத் தெரியவில்லை. ஆனால், அவ்வப்போது அவரிடம் பேசியபோது அவர் சிவாஜி பார்க், புத்தவிஹார் போன்றவற்றைப் பார்த்திருப்பதாகக் கூறினார்.

அத்துடன் அவர் சொன்ன நதிகள் உள்ளிட்ட சில தகவல்கள் ராஜஸ்தான் மாநிலத்திலுள்ள ஆல்வார் மாவட்டத்தில் இருப்பதை அறிந்துகொண்டோம். அந்தப் பகுதியில் உள்ள காவல் நிலையங்களின் உதவியுடன், ஊர்ப் பஞ்சாயத்து தலைவர்களுடன் பேசி அவரது குடும்பத்தைக் கண்டறிந்தோம் என கூறினார்.

இரண்டரை ஆண்டுகளாகத் ஜாகிரை தேடி அலைந்த குடும்பத்தினர் அவர் வருகையால் தற்போது மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்