விபத்தில் மரணமடைந்த மகன்: பெற்றோரின் மோசடி அம்பலம்

Report Print Arbin Arbin in இந்தியா

விபத்தில் மகன் மரணமடைந்ததற்காக 2 வழக்குகளை தொடர்ந்து 2 இடங்களில் இழப்பீடுகளை பெற்ற பெற்றோரை நேரில் ஆஜராகும்படி உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

தமிழகத்தின் நாமக்கல் மாவட்டம் கரட்டுபாளையத்தைச் சேர்ந்த லொரி ஓட்டுனர் சரவணன் கடந்த 2014-ம் ஆண்டு ஆந்திர மாநிலம் நெல்லூர் அருகே லொரியை ஓட்டிச் சென்று கொண்டிருக்கும்போது ஏற்பட்ட விபத்தில் பலியானார்.

இதையடுத்து, சரவணனின் பெற்றோர் மாரிமுத்து மற்றும் மணிமேகலை ஆகியோர் நீலகிரி மாவட்ட தொழிலாளர் இழப்பீட்டு ஆணையரிடம் இழப்பீடு கேட்டு மனு செய்தனர்.

இந்த மனுவை விசாரித்த ஆணையர், ரூ.8 லட்சத்து 20 ஆயிரத்தை இழப்பீடு வழங்குமாறு லொரி காப்பீடு செய்யப்பட்ட நேஷனல் இன்சூரன்ஸ் நிறுவனத்திற்கு கடந்த 2016-ம் ஆண்டு உத்தரவிட்டார்.

அதேபோல, பவானியில் உள்ள மோட்டார் வாகன விபத்து வழக்குகளை விசாரிக்கும் தீர்ப்பாயத்தில் இழப்பீடு கேட்டு மாரிமுத்துவும், மணிமேகலையும் மற்றொரு வழக்கு தொடர்ந்தனர்.

இந்த வழக்கு லோக் அதாலத் என்ற மக்கள் நீதிமன்றத்தில் விசாரிக்கப்பட்டு, ரூ.8 லட்சத்து 50 ஆயிரம் இழப்பீடாக அவர்களுக்கு வழங்கப்பட்டது.

ஒரே வழக்கில் இரண்டு இழப்பீடு வழங்கப்பட்ட விவரம் தெரிய வர, நீலகிரி மாவட்ட தொழிலாளர் இழப்பீட்டு ஆணையரின் உத்தரவை ரத்து செய்ய கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் காப்பீடு நிறுவனம் வழக்கு தொடர்ந்தது.

இந்த வழக்கை விசாரித்த நீதிபதி, இரண்டு வழக்குகளை தொடர்ந்து, இழப்பீடுகளைக் பெற்ற சரவணனின் பெற்றோர் எதிர்வரும் 17 ஆம் திகதி நீதிமன்றத்தில் நேரில் ஆஜராக வேண்டும் என உத்தரவிட்டுள்ளார்.

மேலும் பொலிஸ் அதிகாரி தலைமையில் இந்த வழக்கு தொடர்பாக ஆய்வு மேற்கொண்டு அறிக்கையும் அதே திகதியில் சமர்ப்பிக்க உத்தரவிட்டுள்ளார்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers