திருமணத்தை நிறுத்தி தற்கொலை செய்வதாக மிரட்டிய மணப்பெண்: வெளியான காரணம்

Report Print Arbin Arbin in இந்தியா

தமிழகத்தின் ஆரணி அருகே வரவேற்பு நிகழ்ச்சியின்போது புகைப்படம் எடுப்பதில் மணமகன் வீட்டாருடன் ஏற்பட்ட தகராறில், மணப்பெண் திருமணத்தை தடுத்து நிறுத்தியுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மேற்கொண்டு திருமணத்தை நடத்தினால் தற்கொலை செய்து கொள்வதாகவும் அவர் மிரட்ட்டல் விடுத்துள்ளார்.

திருவண்ணாமலை மாவட்டம், ஆரணி அருகே உள்ள கிராமத்தை சேர்ந்த இளைஞருக்கும், சேத்துப்பட்டு அருகே உள்ள இளம்பெண்ணுக்கும், திருமணம் செய்ய பெரியோர்களால் நிச்சயம் செய்யப்பட்டது.

அதன்படி, நேற்று காலை ஆரணியில் உள்ள திருமண மண்டபத்தில் திருமணம் நடைபெற இருந்தது.

இதையொட்டி, நேற்று முன்தினம் இரவு திருமண வரவேற்பு நிகழ்ச்சி நடந்தது. இதில், இருவீட்டாரின் உறவினர்கள் மற்றும் நண்பர்கள் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினர்.

மேலும், வரவேற்பு நிகழ்ச்சிகள் புகைப்படம், வீடியோவும் எடுக்கப்பட்டது. அப்போது, பெண் வீட்டார் சார்பில் வந்த ஒருவருடன், போட்டோ எடுக்க ஒத்துழைக்காமல் மணமகன் ஒதுங்கிக்கொண்டாராம். பெண் வீட்டார் சார்பில் பலமுறை வற்புறுத்தியும் அவர் போட்டோ எடுத்துக்கொள்ள சம்மதிக்கவில்லையாம்.

இதனை பெண் வீட்டார் தரப்பில் தட்டிக்கேட்டபோது, மணமேடையிலேயே இருவீட்டாருக்கும் இடையே கடும் வாக்குவாதம், தகராறு ஏற்பட்டது.

இதில் ஆத்திரமடைந்த மணமகனின் உறவினர் ஒருவர், அங்குள்ள நாற்காலிகளை எடுத்து உடைத்து ரகளையில் ஈடுபட்டுள்ளார்.

இதையடுத்து, மணமகள் வீட்டார் ஆரணி காவல்துறை அதிகாரி அலுவலகத்திற்கு நேரில் சென்று, புகார் தெரிவித்தனர்.

தொடர்ந்து காவல்துறையினர் இருவீட்டாரையும் அழைத்து பேச்சுவார்த்தை நடத்தினர். ஆனால் மணமகள் வீட்டார் இதனை ஏற்கவில்லை..

மேலும், இந்த திருமணம் நடக்காது என கூறியதுடன், திருமணத்திற்காக தாங்கள் செய்த செலவுக்கான பணத்தை திரும்ப தரும்படியும் கேட்டுள்ளனர்.

இதற்கிடையில் மணமகளும், ‘எனது தந்தையை மேடையில் அவமானப்படுத்திவிட்டார்கள். எனவே, எனக்கு இந்த திருமணம் வேண்டாம்.

மீறி திருமணம் நடத்தினால் நான் தற்கொலை செய்துகொள்வேன்’ என மிரட்டியுள்ளார். இதையடுத்து பெண் வீட்டார் அனைவரும் மண்டபத்தை விட்டு வெளியேறி ஊர் திரும்பினர்.

இதனால் திருமணம் நின்றது.இந்நிலையில், நேற்று காலை அந்த மணமகளுக்கும், அவரது அத்தை மகனுக்கும் ஒரு கோயிலில், பெற்றோர் திருமணத்தை நடத்தி வைத்துள்ளனர்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்