சென்னையில் வசமாக சிக்கிய இலங்கையர்! விசாரணையில் வெளியான தகவல்

Report Print Raju Raju in இந்தியா

சென்னை விமான நிலையத்தில் நடந்த சோதனையில் ரூ. 62.5 லட்சம் மதிப்புடைய 2 கிலோ தங்கத்தை கடத்தி வந்த இலங்கை பயணி உள்பட இரண்டு பேர் கைது செய்யப்பட்டனர்.

சென்னை உள்நாட்டு விமான நிலையத்திற்கு கோவையில் இருந்து தனியார் பயணிகள் விமானம் நேற்று பகல் 11.30 மணிக்கு வந்தது.

இந்த விமானத்தில் இலங்கையை சேர்ந்த ஒருவர் தங்கம் கடத்தி வருவதாக சுங்க அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தது.

இதையடுத்து அதிகாரிகள் சோதனையில் இறங்கிய போது இலங்கையை சேர்ந்த முகமது ராலே (31) என்பவர் அந்த விமானத்தில் உள்நாட்டு பயணியாக வந்திறங்கினார்.

அவரது சூட்கேசை திறந்து பார்த்த போது அதில் மொத்தம் 14 தங்க கட்டிகள் இருந்தன. இதன் மதிப்பு ரூ.52.5 லட்சம்.

இது குறித்து விசாரித்த போது கோவை தனியார் பயணி விமானம் கொழும்பு நகரில் இருந்து நேற்று காலை 6 மணிக்கு சர்வதேச விமானமாக சென்னைக்கு வந்தது.

பின்பு அந்த விமானம் காலை 9 மணிக்கு உள்நாட்டு விமானமாக கோவைக்கு 8.30 மணிக்கு புறப்பட்டு சென்றது.

உள்நாட்டு விமானமாக கோவைக்கு சென்று விட்டு மீண்டும் கோவையில் இருந்து சென்னை திரும்பி வந்த போது தான் இந்த சம்பவம் நடந்தது.

எனவே தங்கம் கடத்தும் ஆசாமிகள் இலங்கையில் இருந்து இந்த தங்கத்தை சென்னைக்கு கடத்தி வந்துள்ளனர்.

விமானம் சென்னைக்கு வருவதற்குள் விமானத்தில் உள்ள கழிவறை தண்ணீர் தொட்டிக்குள் தங்க கட்டிகளை மறைத்து வைத்து விட்டு கடத்தல் ஆசாமி சென்னை விமான நிலையத்தில் இறங்கி சென்று விட்டார்.

அதே கடத்தல் கோஷ்டியை சேர்ந்த மற்றொரு ஆசாமியான முகமது ராலே ஏற்கனவே திட்டமிட்ட படி கோவை சென்று விட்டு அதே விமானத்தில் உள்நாட்டு பயணியாக சென்னை திரும்பி வந்தார்.

அப்போது விமான கழிவறையில் கைபையுடன் சென்று கழிவறை தண்ணீர் தொட்டிக்குள் மறைத்து வைத்திருந்த தங்க கட்டிகளை எடுத்து கைபைக்குள் வைத்துக்கொண்டு அவர் சென்னை விமான நிலையத்தில் வரும் போது பிடிபட்டார் என தெரியவந்தது.

எனவே இலங்கையில் இருந்து இந்த தங்கத்தை கடத்தி வந்து சென்னையில் இறங்கி சென்ற பயணி யார் என்பது பற்றி அதிகாரிகள் விசாரித்து வருகின்றனர்.

இதற்கிடையே குவைத்தில் இருந்து இலங்கை வழியாக லங்கன் ஏர்லைன்ஸ் பயணிகள் விமானம் நேற்று காலை 8.30 மணிக்கு சென்னை சர்வதேச விமான நிலையத்திற்கு வந்தது.

அதில் சென்னையை சேர்ந்த ஜெபருல்லா (24) என்பவரின் பேக்கை பரிசோதித்த போது 4 வளையங்கள் தங்கத்தால் செய்திருந்ததை கைப்பற்றினர். அதோடு ஸ்டாப்லரில் உள்ள தகடும் தங்கத்தில் செய்திருந்ததை கண்டு பிடித்தனர். இதன் மதிப்பு ரூ.10 லட்சம்.

சென்னை விமான நிலையத்தில் அடுத்தடுத்து மொத்தம் 62.5 லட்சம் மதிப்புடைய 2 கிலோ தங்கத்தை பறிமுதல் செய்து இலங்கை பயணி உள்பட 2 பேரை சுங்க அதிகாரிகள் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்