சாதுவான ஆசிரியரை மிரட்டி அட்டகாசம் செய்யும் பள்ளி மாணவர்கள்: புலம்பும் பள்ளி நிர்வாகம்

Report Print Kabilan in இந்தியா

தமிழகத்தின் வேலூர் மாவட்டத்தில் உள்ள பள்ளி ஒன்றில், 12ஆம் வகுப்பு மாணவர்கள் சாதுவான ஆசிரியர் ஒருவரை அசிங்கப்படுத்தும் விடயம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

வேலூர் மாவட்டம் திருப்பத்தூரில் அரசு நிதியுதவி பெறும் பள்ளி ஒன்று இயங்கி வருகிறது. இந்த பள்ளியில் வடமலை என்ற ஆசிரியர் 12 ஆண்டுகளாக பணியாற்றி வருகிறார். சாதுவான சுபாவம் கொண்ட இவர் மாணவர்களை கடிந்துகொள்ள மாட்டார் என்று கூறப்படுகிறது.

ஆனால், 12ஆம் வகுப்பு மாணவர்கள் சிலர் ஆசிரியர் வடமலையை மதிக்காமல் கொடுமைப்படுத்துவதாக புகார் கூறப்பட்டது. ஆனால், ஆசிரியர் கண்டிப்பதற்கு தயக்கப்பட்டு தலைமை ஆசிரியரிடம் இதுகுறித்து தெரிவித்துள்ளார். எனினும், தலைமை ஆசிரியர் இதனை கண்டுகொள்ளாததால் மாணவர்களின் சேட்டை தொடர்ந்து வருவதாக கூறப்படுகிறது.

மேலும், அங்கு பணிபுரியும் அனைத்து ஆசிரியர்களுக்கும் பாதுகாப்பு இல்லாத சூழல் நிலவுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு காரணம் மாணவர்கள் அனைவரும் உள்ளூரைச் சேர்ந்தவர்கள் என்பதும், சாதி ரீதியான போக்கு அதிகமாக இருப்பதாகவும் கூறப்படுகிறது.

இதனால் மாணவர்களை கண்டிக்க முடியாததால், அவர்கள் சீருடை அணியாமல் வகுப்புக்கு வருவது, சட்டையை அவிழ்த்து தலைப்பாகையாக சுற்றிக்கொண்டு மேஜையில் அமருவது போன்ற சேட்டைகளில் ஈடுபட்டு வருகின்றனர்.

இதுகுறித்து பாதிக்கப்பட்ட ஆசிரியர்கள் கூறுகையில், ‘மாணவர்கள் ரவுடிகளைப் போல் பந்தா செய்துகொண்டு ஆசிரியர் வடமலையிடம் வம்பிழுக்கிறார்கள். இன்னும் நிறைய சேட்டைகளை செய்தபடி வீடியோ எடுத்து சமூக வலைதளங்களில் அந்த மாணவர்களே பதிவிட்டுள்ளனர்.

+1 மற்றும் +2 படிக்கும் மாணவர்கள் பலர் சீருடை அணியாமல், தலைமுடியைப் பல்வேறு ஸ்டைல்களில் வைத்துக் கொண்டும் பள்ளிக்கு வருகிறார்கள். செல்போன் பயன்படுத்தக்கூடாது என்று கூறினால் மிரட்டுகிறார்கள்.

இது தொடர்பாக கல்வித்துறை அதிகாரிகளிடம் புகார் தெரிவித்தும் கண்டுகொள்ளவில்லை. மாணவர்களின் எதிர்காலத்தை நினைத்து பொலிசில் புகார் தரவில்லை’ என தெரிவித்துள்ளனர்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்