கெஞ்சிய மனைவி.. மறுத்த கணவன்! குழந்தைகளை தீ வைத்து கொன்றுவிட்டு தற்கொலை செய்து கொண்ட இளம்பெண்

Report Print Santhan in இந்தியா

தமிழகத்தில் கணவர் தனிக்குடித்தனம் வர மறுத்ததால் இரண்டு குழந்தைகளையும் கொன்றுவிட்டு, மனைவி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

காஞ்சீபுரம் மாவட்டம் செய்யூரை அடுத்த பனையூர் பஜனை கோவில் தெருவைச் சேர்ந்தவர் மொய்தீன். கார் டிரைவரான இவருக்கும் நஸ்ரின் என்பவருக்கும் கடந்த 6 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்றுள்ளது.

இந்த தம்பதிக்கு சபீர்(3) என்ற மகனும், 1½ வயதில் நசிகா என்ற மகளும் இருந்தனர். இவர்களுடன் மொய்தீனின் தங்கை மதினா(24)வும் வசித்து வருகிறார்.

மதினா சற்று மனவளர்ச்சி குன்றியவர் என்று கூறப்படுகிறது. இதன் காரணமாக இவர் நஸ்ரின் மற்றும் அவரது குழந்தைகளை திட்டி வந்தார்.

இப்படியே இருந்தால் கஷ்டம் தான், தனிக்குடித்தனம் சென்றாலாவது சந்தோஷமாக இருக்கலாம் என்று நஸ்ரின் தன்னுடைய கணவரை வற்புறுத்தியுள்ளார்.

ஆனால் அதற்கு மொய்தீன் மறுத்ததால் கணவன்-மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது.

நேற்று மதியம் மொய்தீன் வெளியே சென்று விட்டார். குழந்தைகள் இருவரும் வீட்டின் வெளியே விளையாடிக்கொண்டு இருந்தனர்.

நஸ்ரின், தனது குழந்தைகளை சாப்பிட வரும்படி வீட்டுக்குள் அழைத்துச்சென்று கதவை உள்புறமாக தாழ்ப்பாள் போட்டார்.

பின்னர் வீட்டில் இருந்த மண்எண்ணெயை எடுத்து தனது குழந்தைகள் இருவர் மீதும் ஊற்றி தீ வைத்தார்.

இதில் உடல் முழுவதும் தீ பரவியதில் குழந்தைகள் இருவரும் உடல் கருகி பரிதாபமாக இறந்தனர். பின்னர் நஸ்ரினும் தனது உடலில் மண்எண்ணெய் ஊற்றி தீக்குளித்தார்.

அவரது அலறல் சத்தம் கேட்டு ஓடிவந்த அக்கம் பக்கத்தினர் உயிருக்கு ஆபத்தான நிலையில் இருந்த நஸ்ரினை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர்.

இருப்பினும் அவர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்துவிட்டார். இதையடுத்து இது தொடர்பாக வழக்கு பதிவு செய்துள்ள பொலிசார் நஸ்ரின் கணவரிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்