உயிருக்கு போராடும் தந்தை! மணப்பெண்ணுடன் மருத்துவமனையில் தாலி கட்டிய இளைஞனின் நெகிழ்ச்சி சம்பவம்

Report Print Santhan in இந்தியா

தமிழகத்தில் உயிருக்கு போராடு தந்தையிடம் ஆசி பெறுவதற்காக மகன், தந்தை சிகிச்சை பெறும் மருத்துவமனையில் திருமணம் செய்து கொண்ட சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை திருவொற்றியூர் மேற்கு மாட வீதியை சேர்ந்தவர் சுதேஷ். 60 வயதான இவர் வெல்டராக வேலை பார்த்து வருகிறார்.

இவருக்கு மல்லிகா என்ற மனைவியும், பிரகாஷ், சரவணன், சதீஷ்(28) என மூன்று மகன்களும் உள்ளனர்.

இந்நிலையில் சதீசுக்கும், திருவொற்றியூர் சன்னதி தெருவைச் சேர்ந்த சித்ரா என்ற பெண்ணுக்கும் திருமணம் பேசி முடிக்கப்பட்டு, அடுத்த மாதம் பிப்ரவரி 15-ஆம் திகதி திருமணம் நடைபெறவிருந்தது.

ஆனால் கடந்த 11-ஆம் திகதி, திருவொற்றியூர் ரெயில் நிலையம் அருகே தண்டவாளத்தை கடந்து செல்ல முயன்ற சுதேஷ் மீது அந்த வழியாக சென்ற மின்சார ரெயில் மோதியது.

இதனால் படுகாயமடைந்த அவர் சென்னையில் இருக்கும் ஸ்டான்லி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

இந்த விபத்து காரணமாக அவரது இடுப்புக்கு கீழ் இருக்கும் பகுதிகள் அகற்றப்பட்டதால், அவர் உயிருக்கு போராடிக் கொண்டிருக்கிறார்.

இதனால் அவருக்கு இன்று காலை மருத்துவர்கள் அறுவை சிகிச்சை செய்யவுள்ளனர்.

அறுவை சிகிச்சையில் ஏதும் அசம்பாவிதம் நடந்துவிட்டால் தனது தந்தை கண் முன்னே தனது திருமணம் நடக்காதே?, அவரிடம் ஆசீர்வாதம் பெற முடியாதே? என சதீஷ் யோசித்துள்ளார்.

இதையடுத்து தனது தந்தை இருக்கும்போதே அவரது கண் எதிரேயே தனது திருமணத்தை நடத்த வேண்டும் என தனது குடும்பத்தினரிடம் தெரிவித்தார். தந்தை மீதான அவரது பாசத்தை பார்த்து நெகிழ்ந்த இருவீட்டாரும் இதற்கு சம்மதம் தெரிவித்தனர்.

இதையடுத்து சதீஷ் நேற்று இரவு ஸ்டான்லி மருத்துவமனை வளாகத்தில் உள்ள விநாயகர் கோவிலில் இருவீட்டார் ஒத்துழைப்புடன் உறவினர்கள் முன்னிலையில் சித்ராவின் கழுத்தில் தாலி கட்டி திருமணம் செய்து கொண்டார். பின்னர் மருத்துவமனையில் சிகிச்சை பெறும் தந்தையிடம் ஆசீர்வாதம் பெற்றார்.

தந்தை பாசத்தில் மகன் செய்த இந்த திருமண நிகழ்வு மருத்துவமனை வளாகத்தில் இருந்தவர்களை நெகிழ்ச்சி அடைய வைத்தது.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்