அப்பா செத்துட்டாரு..அம்மா ஓடி போய்டாங்க...சோகமே உருவான வினோதினிக்கு கிடைத்த திடீர் மகிழ்ச்சி

Report Print Raju Raju in இந்தியா

தமிழகத்தில் பெற்றோர் இல்லாமல் வளரும் நான்காம் வகுப்பு மாணவிக்கு பள்ளி ஆசிரியர்கள் காதணி விழா நடத்திய நிலையில் சிறுமியின் வாழ்க்கை சோகம் நிறைந்தது என தெரியவந்துள்ளது.

கோவையை அடுத்த ராமசெட்டிப்பாளையம் அரசு தொடக்கப் பள்ளியின் நான்காம் வகுப்பு மாணவி வினோதினிக்கு பெற்றோர்கள் இல்லை.

அவர் தனது பாட்டியிடம் வளர்ந்து வருகிறார். வினோதினிக்கு கம்மல் அணிந்து பள்ளிக்கு செல்லவேண்டும் என்பது நீண்டநாள் கனவு.

ஆனால் அவள் பள்ளிக்கு அனுப்பப்படுவதே பெருங்கொடுப்பினை என்றெண்ணுகிற வீட்டுச் சூழல். பிறகு, எங்கிருந்து கம்மல் குத்துவது? காதணி விழா நடத்துவது?

ஒருநாள் தன் பள்ளித் தோழிகளிடம் இது குறித்து வருந்தியிருக்கிறார். அதை அவர்கள் ஆசிரியைகளிடம் சொல்ல, கடந்த வாரம் பள்ளிக்கூடத்திலேயே வினோதினிக்கு காதணி விழா நடத்தி முடித்திருக்கிறார்கள் அந்தப் பள்ளியின் ஆசிரிய பெருமக்கள்.

மாணவ மாணவிகள் சீர்வரிசைத் தட்டுகளை ஏந்திவர, ஆசிரியைகள் மடியில் வினோதினிக்கு நடத்தப்பட்ட காதணி விழாவுக்குத் பாராட்டுகள் குவிகின்றன.

வினோதினியின் பெற்றோருக்கு என்ன ஆனது என்பது குறித்து அவரே கூறினார்.

அவர் கூறுகையில், அப்பா செத்துட்டாரு, அம்மா எங்கே ன்னு தெரியலை. பாட்டிதான் என்னை வளர்க்குறாங்க என்றார்.

வினோதியின் பாட்டி கூறுகையில், நாலு பசங்க, மூணு பொண்ணுங்க ன்னு ஏழுபேரை பெத்து வளர்த்தவ நான். இது மூத்தவன் பொண்ணு. அவனுக்கு ரெண்டு பொண்ணுங்க. மொத பொண்ணு பிறந்த கொஞ்ச நாள்லயே அவன் இன்னொரு கல்யாணம் பண்ணிக்கிட்டான். அந்தக் கோவத்தில் இவங்க அம்மா அவங்க வீட்டுக்குக் குழந்தையைத் தூக்கிட்டுப் போயிட்டா.

ரெண்டாவது சம்சாரத்துக்கு ரெண்டு குழந்தைங்க பொறந்துச்சு. என்ன சண்டையோ சச்சரவோ தெரியலை அவளும் கோவிச்சு தன் பிள்ளைகளைத் தூக்கிக்கிட்டு அவ அம்மா வீட்டுக்குப் போயிட்டா. அதுக்குப் பிறகு, முதல் சம்சாரத்தை சமாதானம் பண்ணி அழைச்சுட்டு வந்து வாழ்ந்தான். முதல் குழந்தையைத் தன் அம்மாவீட்லயே படிக்க வெச்சிருந்தா.

இங்கே வந்து நல்லா வாழ்ந்தாங்க, அப்போதான் வினோதினி பொறந்தா. இவளுக்கு ஒரு வயசுகூட ஆகலை. அவங்க அப்பன் உடம்புக்கு முடியாமல் செத்துப் போய்ட்டான். இவ அம்மா மனசில் என்ன நினைச்சாலோ தெரியலை. இந்தக் குழந்தையை இங்கேயே போட்டுவிட்டு இன்னொரு வாழ்க்கையைத் தேடிப் ஓடி போயிட்டா.

இதெல்லாம் என் மகன் பண்ணின பாவம். அதை நான்தானே கழுவணும். மத்த பிள்ளைகளோட ஆதரவும் இல்லை. இந்தப் பிள்ளையை எப்படியாவது வளர்த்து ஆளாக்கிரணும் என்பது தான் ஆசை என கூறியுள்ளார்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers