நியூசிலாந்துக்கு படகில் புறப்பட்ட ஈழத்தமிழர்களை மீட்க வேண்டும்: மருத்துவர் ராமதாஸ் வலியுறுத்தல்

Report Print Arbin Arbin in இந்தியா

இந்தியாவின் கேரள மாநிலத்தில் இருந்து நியூசிலாந்துக்கு படகில் புறப்பட்ட 230 ஈழத்தமிழர்களை கண்டுபிடித்து மீட்க வேண்டும் என்று பா.ம.க நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.

இந்த விவகாரம் தொடர்பில் மருத்துவர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில், நியூசிலாந்தில் தஞ்சமடையும் நோக்கத்துடன் கேரளத்தில் இருந்து 230 தமிழர்கள் படகில் புறப்பட்டதும்,

அவர்கள் இதுவரை எந்த நாட்டிற்கும் சென்றடையவில்லை என்பதும் தெரியவந்துள்ளது. குழந்தைகள், பெண்கள், மற்றும் முதியோருடன் சென்ற அந்தப் படகு என்னவானது என்பது இதுவரை தெரியவில்லை.

நியூசிலாந்துக்கு படகு பயணம் மேற்கொண்டவர்களைக் கண்டு பிடித்து மீட்பது ஒரு புறமிருக்க, இனிவரும் காலங்களில் இத்தகைய ஆபத்தான பயணங்களை யாரும் மேற்கொள்ளாமல் தடுக்க வேண்டிய கடமையும், பொறுப்பும் இந்திய அரசுக்கு உண்டு.

எந்த பாதுகாப்பு வசதிகளும் இல்லாத படகில், பல ஆயிரம் கிலோ மீற்றர் தொலைவில் உள்ள அவுஸ்திரேலியா, நியூசிலாந்து உள்ளிட்ட நாடுகளுக்கு, உயிரைப் பணயம் வைத்து தமிழர்கள் பயணம் மேற்கொள்கிறார்கள் என்றால்,

அவர்கள் எந்த அளவுக்கு விரக்தியில் இருக்கிறார்கள் என்பதை அரசுகள் உணர வேண்டும். இந்த நிலை உடனடியாக மாற்றப்பட வேண்டும்.

நியூசிலாந்து நாட்டைப் பொறுத்தவரை ஒவ்வொரு ஆண்டும் அந்த நாட்டுக்குள் 1000 அகதிகள் அனுமதிக்கப்படுகின்றனர்.

அடுத்த ஆண்டு இந்த எண்ணிக்கை 1500 ஆக உயர்த்தப்படவுள்ளது. அதனால் தான் கண்ணியத்தை இழந்து வாழ்வதைவிட, கடலில் இறந்தாலும் பரவாயில்லை என துணிந்து தமிழர்கள் இவ்வாறு செல்கின்றனர்.

எனவே, நியூசிலாந்து நாட்டுக்கு படகுப் பயணம் மேற்கொண்ட ஈழத்தமிழர்களை கண்டுபிடித்து மீட்பதுடன்,

அனைவரையும் அவர்கள் விரும்பும் இடத்திற்கு சட்டபூர்வமாக அனுப்பி வைக்கவோ, ஐ.நா. அகதிகள் ஆணையத்தின் பாதுகாப்பில் நிம்மதியாக வாழவோ,

இந்தியா உள்ளிட்ட உலக நாடுகள் வகை செய்ய வேண்டும். அத்துடன் இனி இத்தகைய ஆபத்தான பயணங்களை தடுக்கும் நோக்கத்துடன் இந்தியாவில் உள்ள ஈழத்தமிழர்கள் அனைவரும் கண்ணியமாகவும், கவுரவமாகவும் வாழ அரசு வகை செய்ய வேண்டும் என அந்த அறிக்கையில் அவர் குறிப்பிட்டுள்ளார்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers