பெண் புலியை கொன்று தின்ற ஆண் புலி! அதிர்ச்சியடைய வைத்த விநோத சம்பவம்

Report Print Kabilan in இந்தியா

இந்தியாவில் தேசிய பூங்கா ஒன்றில் பெண் புலி ஒன்றை ஆண் புலியே கொன்று தின்ற விநோத சம்பவம் நிகழ்ந்துள்ளது.

மத்திய பிரதேச மாநிலத்தில் உள்ள கன்ஹா தேசியப் பூங்காவில் ஏராளமான விலங்குகளுடன், புலிகளின் எண்ணிக்கையும் அதிகமாக உள்ளது. இந்த பூங்காவின் வனத்துறை காவலர்கள் மீது ரோந்து பயணம் சென்றுள்ளனர்.

அப்போது புலியின் எலும்புகள் மற்றும் பற்கள் ரத்தக் கரைகளுடன் சிதறிக் கிடந்துள்ளன. அதனைத் தொடர்ந்து உயர் அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன் பின்னர் சம்பவ இடத்திற்கு சென்ற அதிகாரிகள் ஆய்வு செய்தபோது இறந்து கிடந்த பெண் புலியை, ஒரு ஆண் புலி கொன்று தின்றுள்ளது தெரிய வந்தது.

இது முற்றிலும் விநோதமான சம்பவம் என்பதால் அதிகாரிகள் அதிர்ச்சியடைந்தனர். பொதுவாக புலிக்குட்டிகளை புலியே உண்ணும் சம்பவங்கள் நடக்கும். அது இயல்பான ஒன்றாகும். ஆனால் ஒரு பெரிய புலியை மற்றொரு பெரிய புலி உண்டது இதுவே முதல்முறை என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

மேலும் பல ஆண்டுகளாக புள்ளி விவரங்களின் அடிப்படையில் உலகில் எங்கும் இப்படி ஒரு விநோத சம்பவம் நிகழ்ந்தது இல்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. பெண் புலியை கொன்ற ஆண் புலிக்கு அவ்வப்போது போதிய உணவுகள் வழங்கப்பட்டுள்ளன.

இருந்தபோதிலும் அது இப்படி ஒரு செயலை செய்துள்ளது விநோதமாக உள்ளதாக வனத்துறையினர் தெரிவித்துள்ளனர். ஒருவேளை குறுகிய இடங்களுக்குள் புலிகள் எண்ணிக்கை அதிக அளவில் இருந்ததால் இப்படி ஒரு சம்பவம் நிகழ்ந்திருக்கலாம் என்ற கோணத்திலும் ஆய்வுகள் நடத்தப்பட்டு வருகின்றன.

அத்துடன் இறந்து கிடந்த பெண் புலியின் உடல் பாகங்களை கைப்பற்றிய வனத்துறை அதிகாரிகள், அதனை மேற்கொண்ட ஆய்விற்கு அனுப்பி வைத்துள்ளனர். இந்தியாவிலேயே புலிகள் அதிகம் வசிக்கும் மாநிலமாக உள்ள மத்திய பிரதேசம், கடந்த 1995ஆம் ஆண்டு ‘புலிகள் மாநிலம்’ என்ற பட்டத்தைப் பெற்றது.

உலகளவில் 10 சதவித புலிகளும், இந்திய அளவில் 20 சதவித புலிகளும் மத்திய பிரதேசத்தில் தான் உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers