2 ரூபாய் கடனுக்காக நடந்த கொலை! கொடூர சம்பவம்

Report Print Kabilan in இந்தியா

புதுச்சேரி அருகே இரண்டு ரூபாய் கடனுக்காக நடந்த வாய்த் தகராறு கொலையில் முடிந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

புதுச்சேரியை ஒட்டிய தமிழகப் பகுதியான நல்லவாடு கிராமத்தைச் சேர்ந்தவர் முத்தாள்ராயன்(46). மீனவரான இவர் தனது நண்பர் தரணி என்பவருடன் சேர்ந்து தவளக்குப்பம்-அபிஷேகப்பாக்கம் சாலையில் இருக்கும் மதுக்கடையில் மது அருந்தியுள்ளார்.

பின்னர் அருகில் இருந்த பெட்டிக்கடைக்கு சென்றபோது, அங்கிருந்த வாகன ஓட்டுநர் மணி என்பவருடன் தகராறு ஏற்பட்டுள்ளது. இதில் இரு தரப்பினரும் கடுமையாக தாக்கிக் கொண்டனர். அப்போது ஆத்திரமடைந்த மணி, முத்தாள்ராயனை சரமாரியாக தாக்கிவிட்டு ஓடி விட்டார்.

இதனால் பலத்த காயமடைந்த முத்தாள்ராயன் அங்கேயே ரத்த வெள்ளத்தில் மயங்கி விழுந்தார். இதனைத் தொடர்ந்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த பொலிசார், முத்தாள்ராயனை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள், ஏற்கனவே முத்தாள்ராயன் இறந்துவிட்டதாக தெரிவித்தனர். இதனால் இதனை கொலை வழக்காக பதிவு செய்த பொலிசார், வாகன ஓட்டுநர் மணியை தேடிப்பிடித்து கைது செய்தனர்.

அவரிடம் நடத்திய விசாரணையில் மணி கூறுகையில், ‘மதுக்கடைக்கு அருகே பெட்டிக்கடை நடத்தி வரும் எனது உறவினர், தன் கடையில் 2 ரூபாய் பாக்கி வைத்ததை குறித்து முத்தாள்ராயனிடம் கேட்டார். அப்போது நண்பர் தரணியுடன் சேர்ந்து முத்தாள்ராயன் எனது உறவினரிடம் தகராறு செய்தார்.

அதனைத் தட்டிக்கேட்ட என்னை அவர்கள் இருவரும் தாக்கினர். மேலும் அவர்கள் என்னை கல்லால் தாக்கியதால், ஆத்திரமடைந்த நான் முத்தாள்ராயனை செங்கல்லால் தாக்கினேன்.

அதில் அவர் ரத்த வெள்ளத்தில் மயங்கி விழுந்ததும், நான் அந்த இடத்திலிருந்து தப்பித்து ஓடிவிட்டேன். கோபத்தில் தாக்கினேனே தவிர, கொலை செய்யும் எண்ணத்தில் இல்லை’ என தெரிவித்தார்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers