உள்ளே பெண் இருக்காங்க.. அசிங்கமா பண்ணாதீங்க.. அதிரவைத்த கால்டாக்சி ஓட்டுனர் இறுதியாக பேசிய வீடியோ

Report Print Raju Raju in இந்தியா

சென்னையில் சாலையோரம் காரை நிறுத்தியதற்காக, பொலிசார் ஆபாசமாக திட்டியதாக, மனமுடைந்த கால் டாக்சி ஓட்டுனர் மனக்குமுறலை வீடியோவாக பதிவு செய்துவிட்டு தற்கொலை செய்து கொண்டது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தாம்பரத்தை அடுத்த மறைமலை நகர் ரயில் நிலையம் அருகே, ஜனவரி 25ம் திகதி காலை வாலிபர் ஒருவர் இறந்து கிடப்பதாக, பொலிசாருக்கு தகவல் கிடைத்தது. அங்கு சென்ற பொலிசார் வாலிபரின் உடலை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பினர். விசாரணையில், இறந்தவர் காஞ்சிபுரம் மாவட்டத்தை சேர்ந்த ராஜேஷ் (25) என தெரிய வந்தது.

இதை விபத்து மரணம் என வழக்கு பதிந்த பொலிசார் உடலை உறவினர்களிடம் ஒப்படைத்தனர்.

இந்நிலையில், என் சாவுக்கு காரணம், சென்னை பொலிஸ் தான் என ராஜேஷ் பேசும் 3 நிமிட வீடியோ சமூக வலைதளங்களில் வேகமாக பரவியது.

அந்த வீடியோவில், ராஜேஷ் பேசியதாவது, நான், பாடியில் இருந்து, கோயம்பேடு செல்லும் வழியில் அண்ணா நகர் உள்ளே நுழையும் போது உள்ள முதல் சிக்னலில் டி.எல்.எப்., நிறுவனத்தில் பணிபுரியும் பெண் ஊழியரை ஏற்றிக் கொண்டு ஆண் ஊழியருக்காக, சாலையோரம் காரை நிறுத்தி, காத்திருந்தேன்.

அப்போது வந்த இரண்டு பொலிசார் பின்பக்கம் பலமாக தாக்கி, வண்டியை எடுக்குமாறு கூறினர். இதனால், அங்கிருந்து சற்று துாரம் தள்ளி சாலையோரம் இருந்த குப்பை தொட்டி அருகே காரை நிறுத்தினேன்.

அப்போதும், பின் தொடர்ந்து வந்த அவர்கள் சொல்ல முடியாத வார்த்தைகளால் ஆபாசமாக பேசினர். காருக்குள் பெண் ஊழியர் இருக்கிறார்; இப்படி பண்ணாதீங்க, மோசமா பேசாதீங்க சார் என கூறினேன்.

ஆனாலும் அவர்கள், மேலும் ஆபாசமாக திட்டினர். இதேபோல், திருவொற்றியூர், அணுகு சாலையில் சாலையோரம் என் காரை நிறுத்தி துாங்கினேன். அப்போது வந்த பொலிசார் காருக்கு, லாக் போட்டதுடன், 500 ரூபாய் கொடுத்தால் தான் லாக்கை எடுக்க முடியும் என்றனர்.

நான், பில் கேட்டதற்கு, அவர்களும் என்னை ஆபாசமாக பேசினர். பொதுமக்கள் தவறு செய்தால், அடித்து, சிறையில் அடைக்கிறீர்கள். பொலிஸ் தவறு செய்தால், என்ன செய்வது? என் சாவுக்கு, சென்னை பொலிஸ் தான் காரணம், இது போன்ற பொலிசார் இருக்கும் வரை, மாதத்திற்கு ஒரு டிரைவர் செத்துக் கொண்டு தான் இருப்பான். என்னுடன், சாவு கடைசியாக இருக்க வேண்டும் என வீடியோவில், ராஜேஷ் பேசியுள்ளார்.

இதனிடையே, டிஎல்எப் நிறுவன வளாகத்தின் முன்பு கால்டாக்சி ஓட்டுநர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

கால்டாக்சி ஓட்டுநர் ராஜேஷ் தற்கொலை செய்துகொண்ட விவகாரத்தில், சம்பவ தினத்தன்று காலையில் அவரது கால்டாக்சியில் பயணித்த பெண் பயணி யார் என்பதை, டிஎல்எப் நிர்வாகம் மறைப்பதாகவும் அவரிடம் வாக்குமூலம் பெற்று சம்மந்தப்பட்ட பொலிசார் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கூறி இந்த போராட்டம் நடைபெற்றது.

இந்நிலையில் ராஜேஷின் குற்றச்சாட்டு குறித்து விசாரிக்க, மேற்கு சென்னை இணை ஆணையர் விஜயகுமாரி தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers