53 ஆண்டுகளுக்கு முன்பு அண்ணனை பிரிந்த தம்பி! டிவி நிகழ்ச்சி மூலம் கண்டுபிடித்த நெகிழ்ச்சி சம்பவம்

Report Print Santhan in இந்தியா

கேரளாவின் கண்ணூர் பகுதியைச் சேர்ந்தவர் அம்முதாசன். இவரின் பெற்றோருக்கு 14 குழந்தைகள். அதில் 8 பேர் இறந்துவிட ஆறு பேர் மட்டுமே தற்போது உயிருடன் இருக்கின்றனர்.

இதில் தாசன், அம்மு என்ற சகோதரி இறந்த பிறகு பிறந்ததால் அவருக்கு பெற்றோர் சகோதரியின் பெயரையும் சேர்த்து அம்முதாசன் என்று அழைத்தனர்.

அம்முதாசன் கலைநிகழ்ச்சிகள் மற்றும் தெருக்கூத்து போன்றவற்றை நடத்தி வந்துள்ளார். இதற்காக அவர் வெளியூர் சென்ற போது அம்மினி என்ற பெண்ணை சந்திக்க, இருவருக்கும் காதல் மலர்ந்துள்ளது.

இதையடுத்து அம்முதாசன் குடும்பத்தை பிரிந்து அம்மினியை திருமணம் செய்து கொண்டார்.

திருமணத்திற்கு பிறகு சினிமாவில் நடிக்க சென்னை சென்ற அம்முதாசன் அங்கு கோடம்பாக்கத்தில் தங்கி ஒரு சில படங்களில், சிறு சிறு வேடத்தில் நடித்து வந்துள்ளார்.

ஆனால் போதிய வருமானம் இல்லாத காரணத்தினால் அவர் மீண்டும் கேரளாவிற்கு திரும்பியுள்ளார். கேரளாவின் நெடும்பாசேரியில் மனைவி மற்றும் குழந்தைகளுடன் தங்கி இருந்தார்.

அம்முதாசனின் மருமகன் ஒருவர் சமீபத்தில் மலையாள டெலிவி‌ஷன் சேனல் நடத்திய ரியாலிட்டி ஷோவில் கலந்து கொண்டார்.

அங்கு தன்னுடைய மாமா அம்முதாசனையும் அழைத்துச் சென்றார். அங்கு அம்முதாசன் குடும்பத்தை பிரிந்து 53 ஆண்டுகள் ஆகிறது என்று வேதனையுடன் கூறியுள்ளார்.

இது தொலைக்காட்சியில் ஒளிபரப்பானதால், கண்ணூரில் சிலர் அந்த நிகழ்ச்சியை பார்த்துள்ளனர். அவர்களுக்கு அந்த நபர் அம்முதாசன் என தெரிய வந்தது. அவர்கள் இது பற்றி கண்ணூரில் வசித்த அம்முதாசனின் இளைய சகோதரர் பாலகிருஷ்ணனிடம் கூறியுள்ளனர்.

அதன் பின் அவர் அம்முதாசனுக்கு கடிதம் எழுதியுள்ளார். அதில் அவர்களின் குடும்ப விவரங்கள் பரிமாறப்பட்டன. இதன் மூலம் அம்முதாசனின் இளைய சகோதரர் பால கிருஷ்ணன் என்பதை இருவரும் உறுதி செய்து கொண்டனர்.

இதையடுத்து பால கிருஷ்ணணும், அம்முதாசனும் குடும்பத்தினருடன் சந்தித்தனர். அப்போது மகிழ்ச்சி மிகுதியில் கட்டி அணைத்து கொண்டனர். இது பார்த்தவர் கண்களில் ஆனந்த கண்ணீரை வரவழைத்தது.

53 ஆண்டுகளுக்கு முன்பு குடும்பத்தினரை பிரிந்து சென்றவர் இப்போது மீண்டும் குடும்பத்துடன் இணைந்தது கண்ணூர் பகுதி மக்கள் மத்தியில் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers