பல வருட போராட்டத்திற்கு பின்னரே சான்றிதழ் கிடைத்தது: சாதனை தமிழ்ப்பெண் சிநேகா நெகிழ்ச்சி!

Report Print Vijay Amburore in இந்தியா

உலக அளவில் சாதி, மதம் அற்றவர் என்ற சான்றிதழை முதன்முதலாக பெற்ற தமிழ்ப்பெண் சிநேகா, தன்னுடைய வாழ்க்கை குறித்து நெகிழ்ச்சியாக பேசியுள்ளார்.

வேலூர் மாவட்டம் திருப்பத்தூர் இரட்டை மலை சீனிவாசன்பேட்டை பகுதியைச் சேர்ந்தவர் பார்த்திபராஜா.

திருப்பத்தூரில் உள்ள தனியார் கல்லூரியில் பேராசிரியராக பணிபுரிந்து வரும் இவர், திருப்பத்தூர் நீதிமன்றத்தில் வழக்கறிஞராக பணிபுரிந்து வரும் சிநேகா (34) என்பவரை 2005-ம் ஆண்டு காதலித்து திருமணம் செய்துள்ளார்.

இந்த தம்பதியினருக்கு ஆதிரை நஸ் ரீன், ஆதிலா ஐரின், ஆரிஃபா ஜெஸ்சி என்கிற மூன்று குழந்தைகள் உள்ளனர். மூன்று பேருமே அரசு உதவி பெரும் பள்ளியில் பயின்று வருகின்றனர்.

இந்த நிலையில் உலகிலேயே சாதி, மதம் அற்றவர் என்கிற சான்றிதழை முதன்முதலாக பெற்றது குறித்து சிநேகா தன்னுடைய முகநூல் பக்கத்தில் நெகிழ்ச்சியாக பதிவிட்டுள்ளார்.

சாதி மறுப்பு திருமணம் செய்துகொண்ட ஆனந்தகிருஷ்ணன்- மணிமொழி தம்பதியின் மூத்த மகள் சிநேகா. பள்ளியில் முதல் வகுப்பில் சேர்க்கும் போதே தன்னுடைய மூன்று மகள்களுக்கும் சாதி, மதம் இல்லை என்று கூறியே சேர்த்துள்ளனர்.

அப்போதிலிருந்தே இந்த புரட்சி ஆரம்பித்துள்ளது. பள்ளியில் ஆரம்பித்த இந்த முயற்சி பட்டப்படிப்பு துவங்கி தன்னுடைய குழந்தைகளின் பள்ளிப்பருவத்திலும் தொடர்ந்துள்ளது.

சிநேகா தன்னை போலவே சிந்தனைகளை கொண்ட பார்த்திபராஜாவை காதலித்து திருமணம் செய்துள்ளார். அவருடைய உறுதுணையுடன் முதன்முதலாக 2010-ம் ஆண்டு சாதி, மதம் அற்றவர் என்கிற சான்றிதழுக்கு விண்ணப்பித்துள்ளார். ஆனால் அரசு அதிகாரிகள் அதனை நிராகரித்துள்ளனர்.

விடாமல் தொடர்ந்து முயற்சி செய்து, மீண்டும் 2017-ம் ஆண்டு விண்ணப்பித்துள்ளார். அதன்பலனாக தற்போது சான்றிதழை பெற்றிருப்பதாக மகிழ்ச்சி தெரிவித்துள்ளார்.

"இது ஒரு விதை. நிச்சயம் விருட்சமாகும். என்னைப் போல மற்றவர்களும் இந்தச் சான்றிதழைப் பெற வழிபிறந்துள்ளது" என சிநேகா நெகிழ்ச்சி தெரிவித்துள்ளார். அதேசமயம் தான் ஒரு போதும் இட ஒதுக்கீட்டிற்கு எதிரானவர் இல்லை என்பதையும் உறுதி செய்துள்ளார்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்