ராணுவ வீரர்களின் மரணத்தில் சதி இருக்கிறது: பகிரங்கமான சந்தேகத்தை கிளப்பும் தமிழக வீரரின் மனைவி

Report Print Vijay Amburore in இந்தியா

தகுந்த பாதுகாப்பு இல்லாமல் அதிகமான வீரர்களை ஒரே நேரத்தில் அனுப்பியிருப்பதால் பெரும் சதி நடந்திருபப்தாக மரணமடைந்த தமிழக ராணுவ வீரர் சுப்பிரமணியனின் மனைவி கிருஷ்ணவேணி சந்தேகம் தெரிவித்துள்ளார்.

காஷ்மீர் மாநிலத்தின் புல்வாமா மாவட்டத்தில் கடந்த 14-ம் திகதி அன்று, ஜெய்ஷ் இ முகமது தீவிரவாத இயக்கத்தை சேர்ந்த அடில் அகமது என்னும் நபர் நடத்திய தற்கொலைப்படை தாக்குதலில் 40 இந்திய துணை ராணுவ வீரர்கள் வீர மரணம் அடைந்தனர்.

இந்த சம்பவமானது ஒட்டுமொத்த இந்தியாவையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. பொதுமக்கள் பலரும் ஆங்காங்கே பதாகைகள் வைத்து அவர்களுக்கு அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

இதில் தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியை சேர்ந்த சி.ஆர்.பி.எஃப் பாதுகாப்பு படை வீரர் சுப்பிரமணியனும், அரியலூர் மாவட்டத்தைச் சேர்ந்த சிவசந்திரன் ஆகியோரும் மரணமடைந்திருந்தனர்.

இவர்கள் இருவரின் உடல்களும் நேற்று அரச மரியாதையுடன் அடக்கம் செய்யப்பட்டன.

அப்போது செய்தியாளர்களிடம் பேசிய சுப்பிரமணியனின் மனைவி கிருஷ்ணவேணி, திருமணத்திற்கு பின்னர் 6 முறை என்னுடைய கணவர் வீட்டிற்கு வந்திருக்கிறார். அப்பொழுது அவருடைய வேலை குறித்தும் என்னிடம் பகிர்ந்துள்ளார். ஒரு நாளைக்கு 2 அல்லது 3 கான்வாய் வாகனங்கள் தான் செல்லும்.

அதுவும் காலையில் 3 வாகனங்கள் புறப்பட்டு சென்றால் மற்ற வாகனங்கள் மதியம் அல்லது இரவு தான் செல்லும்.

ஆனால் தற்போது நடந்திருக்கும் சம்பவத்தில் 2 ஆயிரத்து 500 ராணுவ வீரர்கள் ஒரே சமயத்தில் 70 வாகனங்களில் அணிவகுத்து சென்றுள்ளனர். ஜம்மு முகாமில் 20 நாட்கள் வைத்துவிட்டு ஒட்டுமொத்தமாக ஸ்ரீநகருக்கு அனுப்பி உள்ளனர். இதில் சதி நடந்திருக்கிறது. இதற்கு அரசு தான் பதில் அளிக்க வேண்டும் என அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

அதேசமயம் மக்கள் மத்தியில் பலத்தை இழந்து வரும் மோடி தலைமையிலான பாஜக அரசு, இளைஞர்கள் மற்றும் மக்கள் மத்தியில் வெறியை தூண்டுவது போல ஆவேசமான கருத்துக்களை பழி வாங்கும் விதத்தில் பரப்பி வருவது குறிப்பிடத்தக்கது.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்