சர்வதேச விமான கண்காட்சியில் பயங்கர தீ விபத்து: 100 கார்கள் எரிந்து நாசம்! பரபரப்பை ஏற்படுத்திய வீடியோ காட்சி

Report Print Vijay Amburore in இந்தியா

பெங்களூரில் நடைபெற்று வரும் சர்வதேச விமான கண்காட்சியில் திடீரென ஏற்பட்ட பயங்கரமான தீ விபத்தில் 100 கார்கள் எரிந்து நாசமாகியிருப்பதாக முதற்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.

பெங்களுருவில் எலங்கா பகுதியில் AeroIndia2019 என்கிற பெயரில் சர்வதேச விமான கண்காட்சி நடைபெற்று வருகிறது. கடந்த 21ம் தேதி துவங்கிய இந்த கண்காட்சி 25ம் தேதியுடன் நிறைவடைய உள்ளது.

இதில் பல நாடுகளை சேர்ந்த முன்னணி விமானங்கள் கலந்துகொண்டு சாகசங்களை செய்து காட்டி வருகின்றன. இதனை காண்பதற்காக ஆயிரக்கணக்கான மக்கள் குவிந்து வருகின்றனர்.

நிகழ்ச்சியின் மூன்றாவது நாளான இன்று, இலகு ரக போர் விமானமான தேஜஸ் விமானத்தில், இந்திய பாட்மின்டன் வீராங்கனை பி.வி.சிந்து பறந்து அனைவருக்கும் ஆச்சர்யத்தை ஏற்படுத்தினார்.

இந்த நிலையில், கண்காட்சி அருகே உள்ள கார் பார்க்கிங் பகுதியில் புல்வெளியில் லேசாக தீ பற்றி எரிய ஆரம்பித்துள்ளது.

தீயின் வேகம் அதிகரித்ததை அடுத்து, அங்கு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த 100க்கும் மேற்பட்ட கார்களில் பரவியது. இந்த சம்பவத்தில் தற்போது வரை 80 முதல் 100 வாகனங்கள் எரிந்து நாசமாகியிருப்பதாக முதற்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்த சம்பவத்திற்கு யாரேனும் தனி நபர் காரணமாக இருப்பார்களா என்ற கோணத்தில் பொலிஸார் விசாரணையை ஆரம்பித்துள்ளனர். இதற்கிடையில் சம்பவம் இடத்திற்கு 10 வாகனங்களில் தீயணைப்பு படை வீரர்கள் விரைந்துள்ளனர்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்