நெஞ்சை பதை பதைக்கும் பொள்ளாச்சி வன்கொடுமை வீடியோவை வெளியிட்டது ஏன்? நக்கீரன் கோபால் விளக்கம்

Report Print Kabilan in இந்தியா

பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை தொடர்பான வீடியோவை வெளியிட்டது ஏன் என்று மூத்த பத்திரிக்கையாளர் நக்கீரன் கோபால் விளக்கம் அளித்துள்ளார்.

தமிழகத்தையே உலுக்கியிருக்கும் பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை விவகாரம் தொடர்பாக கைது செய்யப்பட்டுள்ள நான்கு பேர் தொடர்ந்து விசாரிக்கப்பட்டு வருகின்றனர்.

இந்த விவகாரம் வெளியே தெரியவர காரணமாக இருந்தது மூத்த பத்திரிக்கையாளர் நக்கீரன் கோபால் தான். அவர் வெளியிட்ட நெஞ்சை பதை பதைக்க வைக்கும் வீடியோ தான் இந்த பிரச்சனையை வெளியுலகுக்கு காட்டியது.

இந்நிலையில், இந்த வீடியோவை வெளியிட்டது ஏன் என நக்கீரன் கோபால் விளக்கம் அளித்துள்ளார். இதுகுறித்து அவர் அளித்த பேட்டியில் கூறுகையில்,

‘பொள்ளாச்சி விவகாரத்தை அப்படியே விட்டுவிட மாட்டோம். இதுகுறித்து நாங்கள் தனியாக விசாரித்து வருகிறோம். எங்கள் விசாரணையும் போய்க்கொண்டு இருக்கிறது. இதன் முழு பின்னணி குறித்து விரைவில் கண்டுபிடிப்போம்.

இந்த பிரச்சனை மக்களுக்கு தெரிய வேண்டும் என்பதுதான் எங்கள் நோக்கம். பெண்களுக்கு கிடைக்க வேண்டிய நீதியை தடுத்து நிறுத்தி விடாதீர்கள். பெண்களின் வாழ்க்கையில் விளையாடும் நேரம் கிடையாது இது. பார் நாகராஜனை இந்த வழக்கில் தீவிரமாக விசாரித்தால் பல உண்மைகள் வெளியாகும்.

நமது வீட்டு பிள்ளைகளுக்கு இது போன்று நடந்தால் அமைதியாக இருப்போமா. இருக்க மாட்டோம் அல்லவா, அப்படித்தான் இதுவும். பாதிக்கப்பட்டது எல்லோரும் பெண்கள். அவர்கள் நமது பிள்ளைகள். அவர்களை நாம் தான் காக்க வேண்டும்.

வீடியோவை வெளியிடக்கூடாது என்ற சமூக ஆர்வலர்களின் கோரிக்கையை ஏற்க முடியாது. வீடியோவை வெளியிட்டால் தான் விவகாரம் வெளியே தெரியும். குற்றவாளிகள் தப்பிக்கூடாது என்ற காரணத்திற்காகவே வீடியோ வெளியிடப்பட்டது, அது தற்போது நடந்து இருக்கிறது’ என தெரிவித்துள்ளார்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்