மாணவர்களின் தொடர்போராட்டம் எதிரொலி: பொள்ளாச்சி வழக்கினை சிபிஐக்கு மாற்றி தமிழக அரசு உத்தரவு

Report Print Vijay Amburore in இந்தியா

தமிழகம் முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கும் பொள்ளாச்சி பாலியல் வழக்கினை, சிபிசிஐடி விசாரித்து வந்த நிலையில், அதனை சிபிஐ-க்கு மாற்றி தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.

பொள்ளாச்சியில் கடந்த 7 வருடங்களுக்கும் மேலாக பேஸ்புக் மூலம் பழக்கமான ஏராளமான பெண்களை பாலியல் வன்புணர்வு செய்ததோடு, அதனை வீடியோவாக எடுத்து வைத்து மர்ம கும்பம் ஒன்று பணம் பறித்து வந்துள்ளது.

இதில் பாதிக்கப்பட்ட பெண் ஒருவர் புகார் கொடுத்ததை அடுத்தே, இந்த விவகாரம் தமிழகம் முழுவதும் தெரியவந்து பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இந்த சம்பவம் தொடர்பாக தற்போது வரை திருநாவுக்கரசு, சதீஷ், சபரிராஜன், வசந்தகுமார் ஆகிய 4 பேர் கைது செய்யப்பட்டு விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர்.

அவர்களிடம் இருந்து பறிமுதல் செய்யப்பட்ட செல்போன்களில் இளம்பெண்களை பாலியல் ரீதியிலாக சித்ரவதை செய்யும் ஆயிரக்கணக்கான வீடியோக்கள் இடம்பெற்றுள்ளன.

இத்தகைய கொடூர செயல்களில் ஈடுபட்ட நால்வருக்கும் கடுமையான தண்டனை வழங்க வேண்டும் எனவும், இதில் சம்மந்தப்பட்டுள்ள மற்ற நபர்களையும் விசாரிக்க வேண்டும் என போராட்டம் வலுத்து வருகிறது.

இந்த வழக்கில் ஆரம்பத்தில் மந்தமாக செயல்பட்ட பொலிஸார், பொதுமக்கள் மற்றும் மாணவர்களின் போராட்டத்தால் நேற்றைக்கு முன்தினம் வழக்கினை சிபிசிஐடிக்கு மாற்றி தமிழக டிஜிபி டி.கே.ராஜேந்திரன் உத்தரவிட்டிருந்தார்.

இதில் பல அரசியல்வாதிகளின் மகன்களுக்கும் தொடர்பு இருப்பதால் அவர்களை காப்பாற்ற தமிழக அரசு முயற்சித்து வருவதாகவும், சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டதற்கும் எதிர்ப்பும் கிளம்பியது.

இதனால் அடுத்த 5மணி நேரத்திலே வழக்கினை சிபிஐக்கு மாற்றுவது குறித்து தமிழக அரசு பரிந்துரை செய்தது. இந்த நிலையில் பல இடங்களில் போராட்டம் வெடித்ததை அடுத்து, வழக்கினை சிபிஐக்கு மாற்றி தமிழக அரசு அரசாணை பிறப்பித்துள்ளது.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்