கற்பாவது வெங்காயமாவது! நடிகர் சூர்யா

Report Print Deepthi Deepthi in இந்தியா

பொள்ளாச்சி விவகாரம் குறித்து தமிழக அரசியல்வாதிகள் மற்றும் சினிமா பிரபலங்கள் தொடர்ந்து கண்டனத்தையும், கருத்தையும் பதிவு செய்து வருகின்றனர்.

நடிகர் சூர்யாவும் பொள்ளாச்சி விவகாரம் குறித்து நீண்ட அறிக்கையை வெளியிட்டுள்ளார்.

குழந்தைப்பேறு காலத்தில், மனைவியுடன் மருத்துவமனை செல்லும்போதெல்லாம் ஒரு வாசகம் மனதை நெருடும். ‘தாயின் கருவில் இருக்கிற குழந்தை, ஆணா, பெண்ணா என்று ஸ்கேன் செய்து பார்ப்பது சட்டப்படி குற்றம்’ என்று தமிழிலும், ஆங்கிலத்திலும் எழுதப்பட்டிருக்கும்.

படித்தவர்களும், பணக்காரர்களும் வந்துபோகிற மருத்துவமனையில்கூட இப்படி எழுதிப்போட வேண்டிய அவலத்தில் வாழ்கிறோமே என்று வெட்கமாக இருந்தது.

சிரித்த முகத்துடன், உடையில்லாமல் நிற்கிற ஒரு வயது பெண் குழந்தையிடம், நம்முடைய ‘மானப் பிரச்சனையை நேரடியாகவும், மறைமுகமாகவும் பிரசாரம் செய்ய தொடங்குவதில் ஆரம்பிக்கிறது நம்முடைய வன்முறை.

இதிகாசமாக, வரலாறாக, பண்பாடாக, வீரமாக நாம் கொண்டாடுகிற அனைத்திலும் பெண் உடலுக்கு எதிரான அந்தக் கருத்தியல் வன்முறை நிரம்பி வழிகிறது.

கடவுளின் அவதாரமாகவே இருந்தாலும், நெருப்பில் இறங்கித்தானே இங்கே ‘கற்பை’ நிரூபித்து அவள் மீண்டு வர வேண்டும்! ‘என் மனைவியின் ஒழுக்கத்தை யாருக்கும் நிரூபிக்க வேண்டிய அவசியம் இல்லை.அவள் நலமுடன் இருப்பதே எனக்கு மகிழ்ச்சி.

கற்பாவது, வெங்காயமாது’ என்று சொல்லும் தைரியம் இங்கே நம்முடைய கடவுளுக்கேகூட இல்லையே!

கோவை மண்ணிலிருந்து படித்து முடித்து வெளியூரில் வேலை பார்க்கும் ஒரு பெண்ணின் முகநூல் பதிவு என்னை மிகவும் நெகிழச் செய்தது.

‘எவனாச்சும் உன் போட்டோ, வீடியோவ வெச்சி மிரட்டினா பயப்படாத. ‘என்ன வேணா பண்ணிக்கோடா. உலகத்துல இருக்கிற எல்லா பொண்ணுக்கும் இருக்கிற உடம்புதான் எனக்கும் இருக்குனு சொல்லு’ என்று தொலைபேசியில் கூறிய தன் அம்மாவை கட்டிப்பிடித்து அழ வேண்டுமென்று தோன்றியது’ என்று அந்தப்பெண் எழுதியிருந்தார்.

ஒவ்வொரு பெண்ணுக்கும் இத்தகைய நம்பிக்கை நிறைந்த, பாதுகாப்பான இடமாக குடும்பங்கள் மாறாதவரை,இந்தக் குற்றங்கள் மீண்டும் மீண்டும் நடக்கும். பாலியல் வன்முறையை விட ஆபத்தானது, பெண்களுக்கு எதிராக நம் சமூகம் கட்டமைத்து வைத்திருக்கும் கருத்தியல் வன்முறை என்பதை உணருவோம் என தெரிவித்துள்ளார்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்