ராமதாஸ்- விஜயகாந்த் சந்திப்பின் பின்னணி இதுதானாம்

Report Print Fathima Fathima in இந்தியா

சென்னை சாலிகிராமத்தில் உள்ள இல்லத்தில் தேமுதிக தலைவர் விஜயகாந்தை பாமக தலைவர் ராமதாஸ் இன்று சந்தித்து பேசினார்.

நாடாளுமன்ற தேர்தலில் அதிமுக கூட்டணியில் இடம்பெற்றுள்ள பாமகவுக்கு ஏழு தொகுதிகளும், தேமுதிகவுக்கு நான்கு தொகுதிகளும் ஒதுக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் இன்று காலை 11.15 மணியளவில் விஜயகாந்த் வீட்டுக்கு வந்த டாக்டர் ராமதாஸ், டாக்டர் அன்புமணி ராமதாஸ் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினர்.

அவர்களுடன் ஜி.கே.மணி, ஏ.கே.மூர்த்தி, மாவட்ட செயலாளர் வெங்கட்ராமன் வந்திருந்தார்கள்.

சிறிது நேரத்தில் அ.தி.மு.க. அமைச்சர்கள் தங்கமணி, வேலுமணி மற்றும் முன்னாள் அமைச்சர் கோகுல இந்திரா ஆகியோரும் வந்தனர்.

இதன் பின்னணியில் அதிமுக இருப்பதாக கூறப்படுகிறது, கடந்த 2006ம் ஆண்டு பாமகவின் கோட்டை எனப்படும் விருத்தாச்சலத்தில் போட்டியிட்டு வென்றவர் விஜயகாந்த்.

அன்றிலிருந்தே இரு கட்சிகளும் எதிரும் புதிருமாக இருந்தனர், தேமுதிகவை கடுமையாக விமர்சித்தும் வந்தது பாமக.

அதுமட்டுமின்றி 2014ம் ஆண்டு நடந்த நாடாளுமன்ற தேர்தலில் பாஜக கூட்டணியில் இரு கட்சிகளும் இடம்பெற்றிருந்தாலும், விஜயகாந்த்- ராமதாஸ் ஒரே மேடையில் பிரசாரம் செய்யவில்லை, கட்சித் தொண்டர்களுக்கும் சுமூகமான உறவு இருந்ததில்லை.

இதை கருத்தில் கொண்டே இந்த தேர்தலில் காய் நகர்த்த அதிமுக திட்டமிட்டதாம், இதன்படி உடல்நிலை சரியில்லாமல் இருக்கும் விஜயகாந்தை ராமதாஸ் நேரில் சென்று நலம் விசாரித்தால் நன்றாக இருக்கும் என எண்ணியதுடன், தொண்டர்களும் இணைந்து பணியாற்றுவார்கள் என திட்டமிடப்பட்டதாம்.

இதன்படியே இன்றைய சந்திப்பு நிகழ்ந்ததாக கூறப்படுகிறது. விஜயகாந்தை சந்தித்த பின் பேசிய ராமதாஸ், அமெரிக்காவில் சிகிச்சை பெற்று சென்னை திரும்பிய பிறகு அவரை சந்தித்து உடல்நலம் விசாரித்தேன்.

பா.ம.க.- தே.மு.தி.க. தொகுதி பங்கீடு பற்றியோ, தேர்தல் குறித்தோ எதுவும் பேசவில்லை. தேர்தல் நேரத்தில் தொகுதிகளை பிரிப்பதில் இழுபறி ஏற்படுவது வழக்கமான நடைமுறைதான் என தெரிவித்துள்ளார்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்