மோடியை எதிர்த்து நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிடும் தமிழக விவசாயிகள்

Report Print Kabilan in இந்தியா

இந்தியாவின் வாரணாசி நாடாளுமன்ற தொகுதியில், பிரதமர் நரேந்திர மோடியை எதிர்த்து தமிழக விவசாயிகள் 111 பேர் போட்டியிடுகிறார்கள்.

இந்தியாவில் நாடாளுமன்றத் தேர்தல் ஏப்ரல் 11ஆம் திகதி தொடங்கி, மே மாதம் 19ஆம் திகதி வரை 7 கட்டங்களாக நடைபெறுகிறது. இந்த தேர்தலில் பிரதமர் நரேந்திர மோடி உத்தர பிரதேச மாநிலம் வாரணாசி தொகுதியில் மீண்டும் போட்டியிடுகிறார்.

இந்நிலையில், தமிழக விவசாயிகள் 111 பேர் வாரணாசி தொகுதியில் மோடியை எதிர்த்து போட்டியிடுகின்றனர். கடந்த சில மாதங்களுக்கு முன்பு தங்களது கோரிக்கைகளை நிறைவேற்றக் கூறி அவர்கள் போராட்டம் நடத்தினர்.

ஆனால், அதற்கு போதிய பலன் கிடைக்காததால் தங்களது கோரிக்கைகளை வலியுறுத்தும் வகையில், மோடியை எதிர்த்து போட்டியிடுவதாக அவர்கள் தெரிவித்துள்ளனர். இதுதொடர்பாக தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்கத்தின் தலைவர் அய்யாக்கண்ணு கூறுகையில்,

‘விவசாய விளைபொருட்களுக்கு லாபகரமான விலை கிடைக்க வேண்டும், விவசாயிகள் வாங்கிய கடன்களை தள்ளுபடி செய்ய வேண்டும், நதிகளை இணைக்க வேண்டும், தனிநபர் காப்பீடு வழங்க வேண்டும் என்பது போன்ற கோரிக்கைகளை வலியுறுத்தி,

வருகிற நாடாளுமன்ற தேர்தலில் பிரதமர் நரேந்திர மோடியை எதிர்த்து, உத்தரபிரதேச மாநிலம் வாரணாசி தொகுதியில் நான் உட்பட தமிழக விவசாயிகள் 111 பேர் போட்டியிட இருக்கிறோம்.

இதற்காக நாங்கள் வாரணாசிக்கு அடுத்த மாதம் 22ஆம் திகதி ரயிலில் புறப்பட்டு செல்கிறோம். 24ஆம் திகதி காலை வாரணாசியை சென்றடைந்து விடுவோம். அன்றைய தினமே அங்கு எங்களுடைய வேட்பு மனுக்கள் தாக்கல் செய்ய இருக்கிறோம்.

பின்னர், அங்கு வீதி வீதியாக சென்று பிரச்சாரம் செய்வோம். வேட்பு மனு தாக்கலின்போது ஒரு சுயேட்சை வேட்பாளரின் பெயரை 10 பேர் முன்மொழிய வேண்டும் என்பதால், அதற்கான ஏற்பாட்டையும் செய்து இருக்கிறோம்.

அத்துடன் பிரச்சாரம் செய்வதற்காக 300 பேரையும் வாரணாசிக்கு அழைத்துச் செல்ல இருக்கிறோம்’ என தெரிவித்துள்ளார். வாரணாசி தொகுதியில் 7வது கட்டமாக மே 19ஆம் திகதி வாக்குப்பதிவு நடைபெறுவது குறிப்பிடத்தக்கது.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers