2 வருடங்களுக்கு முன் மாயமான தம்பதி... திடீரென வந்த செல்போன் அழைப்பு: கண்ணீரில் நனைந்த பெற்றோர்!

Report Print Vijay Amburore in இந்தியா

திருநெல்வேலியில் கடந்த 2 வருடங்களுக்கு முன் மாயமான தம்பதி தற்போது டெல்லியில் வசித்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

திருநெல்வேலி மாவட்டம் புளியங்குடி பகுதியை சேர்ந்தவர் காஜாமைதீன் (37). சென்னையில் பணிபுரிந்து வந்த இவர், கடந்த 2014ம் ஆண்டு ஜூலை மாதம் தஹ்ரித் நிஷா (24) என்பவரை திருமணம் செய்துகொண்டார்.

இந்த தம்பதியினருக்கு 4 வயதில் ஹானிஷ் அகமது என்கிற மகன் இருக்கிறான். 2016ம் ஆண்டு தன்னுடைய மனைவி மற்றும் மகனை காஜாமைதீன் சென்னைக்கு அழைத்துசென்றுள்ளார்.

அன்றிலிருந்து குடும்பத்தினரை இருவரும் தொடர்பு கொள்ளவில்லை. தஹ்ரித்நிஷாவின் பெற்றோர் சென்னைக்கு சென்று தேடி பார்த்தனர். அங்கு கிடைக்காததை அடுத்து, பெங்களுருவில் தேடி பார்த்துவிட்டு பொலிஸ் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர்.

ஆனால் அவர்கள் மூன்று பேர் குறித்த எந்த தகவலும் கிடைக்காத நிலையில், தஹ்ரித் நிஷாவின் தந்தை மைதீன்பாட்சா மதுரைக்கிளை நீதிமன்றத்தில் மனுதாக்கல் ஒன்று செய்திருந்தார்.

அந்த மனுவில், புகார் கொடுத்தும் எனது மகள் தஹ்ரித்நிஷா, மருமகன் காஜாமைதீன், பேரன் ஹனிஷ்அகமது ஆகிய 3 பேரையும் பொலிஸாரால் கண்டுபிடிக்க முடியவில்லை. இதனால் வழக்கினை சிபிசிஐடிக்கு மாற்ற வேண்டும் என குறிப்பிட்டிருந்தார்.

இதனை ஏற்றுக்கொண்ட நீதிமன்றம் 2 வாரத்திற்குள் பதிலளிக்குமாறு பொலிஸாருக்கு உத்தரவிட்டது. இதனையடுத்து பொலிஸார் செல்போன் எண்ணுடன் கூடிய விளம்பரம் ஒன்றினை வெளியிட்டனர்.

சமூக வலைத்தளம் முழுவதும் இந்த விளம்பரம் பரவியதை அடுத்து, அதில் இருந்த செல்போன் எண்ணுக்கு காஜாமைதீன் தொடர்பு கொண்டு, டெல்லியில் தனியார் வங்கி கிளையில் வேலை பார்ப்பதும், அங்கு புறநகர் பகுதியில் வீடு எடுத்து மனைவி, குழந்தைகளுடன் தங்கியிருப்பதாகவும் கூறியுள்ளார்.

மேலும், குடும்பத் தகராறில் இருப்பிடம் குறித்து பெற்றோரிடம் தகவல் கூறாமல் இருந்துவிட்டதாகவும், விடுமுறையில் விரைவில் புளியங்குடி வருவதாகவும் தெரிவித்துள்ளார்.

மறுநாள் தம்பதியினர் பெற்றோரிடம் செல்போனில் பேசியுள்ளனர். நீண்ட நாட்களுக்கு பிறகு குரலை கேட்ட அவர்களது பெற்றோர் ஆனந்த கண்ணீர் வடித்துள்ளனர்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்