நடிகர் ரஜினிகாந்த் பரபரப்பு பேட்டி

Report Print Deepthi Deepthi in இந்தியா

நாடாளுமன்ற மக்களவை தேர்தலில் வாக்களித்த பின்னர் நடிகர் ரஜினிகாந்த் போயஸ் கார்டனில் வைத்து பத்திரிகையாளர்களுக்கு பேட்டியளித்துள்ளார்.

அப்போது நிருபர்கள் கேட்ட கேள்விகளும், அவற்றுக்கு ரஜினிகாந்த் அளித்த பதில்களும் பின்வருமாறு,

கேள்வி:- டுவிட்டரில், ‘அடுத்த ஓட்டு ரஜினிகாந்துக்குத்தான்’ என்று உங்கள் ரசிகர்கள் குறிப்பிட்டு வருகின்றனரே?

பதில்:- அவர்களுடைய ஆர்வம் எனக்கு புரிகிறது. கண்டிப்பாக அவர்களை ஏமாற்ற மாட்டேன்.

கேள்வி:- தேர்தலில் வழக்கமான அளவுக்கு 70 சதவீத வாக்குப்பதிவே நடைபெற்று உள்ளது. இதில் மக்கள் பக்கம் குறை இருக்கிறதா? இல்லை தேர்தல் கமிஷன் உரிய நடவடிக்கை எடுக்கவில்லையா?

பதில்:- 70 சதவீதம் என்பது நல்ல ஓட்டு பதிவுதான். சென்னையில் மட்டும் 55 சதவீதம் வாக்கு பதிவானதற்கு காரணம், தொடர்ச்சியான 4 நாட்கள் விடுமுறையில் மக்கள் சொந்த ஊருக்கு சென்று இருப்பார்கள் என நினைக்கிறேன்.

கேள்வி:- வாக்குச்சாவடி மையங்களின் எண்ணிக்கையை அதிகப்படுத்தினால் நன்றாக இருக்கும் என்று நினைக்கிறீர்களா?

பதில்:- நிச்சயமாக நன்றாக இருக்கும்.

கேள்வி:- தமிழகத்தில் 18 சட்டசபை தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் நடைபெற்று உள்ளது. மே 23-ந் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெற உள்ளது. ஒருவேளை ஆட்சி மாற்றம் ஏற்பட்டால் உடனடியாக உங்கள் கட்சி அறிவிப்பு இருக்குமா?

பதில்:- மே 23-ந் தேதிக்கு பிறகு முடிவு செய்யலாம்.

கேள்வி:- மீண்டும் மோடி பிரதமராக வாய்ப்பு இருக்கிறதா?

பதில்:- மே 23-ந் தேதி தெரிந்துவிடப் போகிறது.

கேள்வி:- தேர்தலின் போது அரியலூரில் நடைபெற்ற வன்முறையை எப்படி பார்க்கிறீர்கள்?

பதில்:- முன்பு நடைபெற்ற வன்முறை சம்பவங்களை விட இது மிகவும் குறைவுதான். கண்டிப்பாக இந்தமுறை மிகவும் நன்றாக செய்து இருக்கிறார்கள். அதில் எந்தவித சந்தேகமும் கிடையாது.

கேள்வி:- தேர்தலில் பணபரிமாற்றம் அதிக அளவில் நடைபெற்று இருப்பதாகவும், தேர்தல் கமிஷன் இதில் தோல்வி அடைந்து இருப்பதாகவும் கருத்துகள் இருக்கிறதே?

பதில்:- அதை தேர்தல் கமிஷன்தான் பார்க்க வேண்டும். அது குறித்து நான் கருத்து சொல்ல விரும்பவில்லை.

கேள்வி:- தேர்தல் முடிவுகள் வந்தவுடன் தமிழகத்தில் ஆட்சி மாற்றம் வரும் என்று தி.மு.க. தரப்பில் கூறுகிறார்கள். ஒருவேளை மீண்டும் சட்டமன்ற தேர்தல் வந்தால் நீங்கள் உடனடியாக சந்திக்க தயாரா?

பதில்:- எப்போது சட்டசபை தேர்தல் வந்தாலும் சந்திக்க தயார் என பதில் அளித்துள்ளார்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்