இலங்கை தொடர் வெடிகுண்டு தாக்குதல்: இன்டர்போல் குழுவுடன் களமிறங்குகிறதா இந்திய புலனாய்வு பிரிவு?

Report Print Arbin Arbin in இந்தியா

இலங்கை தொடர் குண்டுவெடிப்பு சம்பவங்களை விசாரிக்கும்பொருட்டு இன்டர்போல் குழு களமிறங்கியுள்ள நிலையில், இந்திய புலனாய்வு அமைப்பின் தேசிய புலனாய்வு பிரிவு விசாரணைக்கு விருப்பம் தெரிவித்துள்ளது என தகவல் வெளியாகியுள்ளது.

இலங்கையில் ஈஸ்டர் தினத்தில் நடத்தப்பட்ட தொடர் குண்டு வெடிப்பு தாக்குதலில் 310 பேர் கொல்லப்பட்டனர்.

ஏராளமானோர் உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனைகளில் சிகிச்சைபெற்று வருகின்றனர்.

இந்த தாக்குதல் சம்பவம் தொடர்பாக முன்னரே உரிய அதிகாரிகளால் எச்சரிக்கை விடுக்கப்பட்டிருந்ததாகவும், ஆனால் அதை உள்ளூர் பொலிஸ் அமைப்புகள் கருத்தில் கொள்ளவில்லை என குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

மேலும், இலங்கையில் நடத்தப்பட்ட இந்த தாக்குதல் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக இந்திய பாதுகாப்பு முகமைகளால் பார்க்கப்படுகின்றன.

மேலும், இலங்கை தாக்குதல் தெற்கு ஆசியாவில் தீவிரவாதிகள் தடம் பதிக்க முயற்சிக்கின்றனர் என்பதையும் காட்டுவதாக இந்திய பாதுகாப்பு முகமைகள் சுட்டிக்காட்டியுள்ளன.

மேலும், கொழும்புவிற்கு சென்று விசாரணையை மேற்கொள்ள தேசிய புலனாய்வு பிரிவு ஆர்வம் காட்டுகிறது,

இதுதொடர்பாக இந்திய உள்விவகாரத்துறையிடம் விரைவில் கோரிக்கை வைக்க உள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

மட்டுமின்றி, இதுபோன்ற பெரிய அளவிலான தாக்குதல் இந்திய துணைக்கண்டத்தில் சமீபத்திய ஆண்டுகளில் நடக்கவில்லை எனவும்,

இது, இந்தியாவின் நலன்களுக்கு எதிரான ஒரு புதிய சக்தியின் தோற்றத்தை சுட்டிக்காட்டுவதாகவும் அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

தேசிய தவ்ஹீத் ஜமாஅத் இந்த தாக்குதலை நடத்தியுள்ளது என இலங்கை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

ஆனால் இந்த அமைப்பு தனியாக இவ்வளவு பெரிய தாக்குதலை நடத்தியிருக்க வாய்ப்பு இல்லை.

இதுபோன்ற தாக்குதலை அவ்வமைப்பு நடத்தியதற்கான வரலாறும் கிடையாது எனவும்,

ஐ.எஸ். பயங்கரவாத இயக்கத்திற்கு ஆள்சேர்த்த இலங்கையர்கள் சிலர் சிரியாவில் இருந்து இலங்கைக்கு திரும்பியுள்ளனர்.

இந்த கோணத்திலான விசாரணையை புறக்கணிக்க முடியாது எனவும் இந்திய பாதுகாப்பு வட்டார அதிகாரிகள் தரப்பு சுட்டிக்காட்டியுள்ளது.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்