இலங்கை குண்டுவெடிப்பு எதிரொலி... தலைமறைவாக உள்ள ஐஎஸ் தீவிரவாதிகளுக்கு குறி: நடவடிக்கை தீவிரம்

Report Print Arbin Arbin in இந்தியா

தமிழகத்தில் தலைமறைவாக உள்ள 5 ஐஎஸ் தீவிரவாதிகளை பிடிப்பதற்காக தற்போது சிறையில் அடைக்கப்பட்டுள்ள ஐஎஸ் தீவிரவாதிகளிடம் விசாரணை நடத்த என்.ஐ.ஏ முடிவெடுத்துள்ளது.

ஐஎஸ் தீவிரவாத இயக்கத்திற்கு தமிழ்நாட்டில் ஆட்களை திரட்டுவதில் கடலூர் மாவட்டம் பரங்கிப்பேட்டையைச் சேர்ந்த காஜா பக்ருதீன் முக்கிய பங்கு வகித்தது விசாரணையில் தெரியவந்தது.

மட்டுமின்றி சிங்கப்பூர் குடியுரிமை பெற்ற இவர் சிரியாவுக்கு சென்று தீவிரவாதிகளிடம் ஆயுத பயிற்சி பெற்றவர்.

கடந்த 2017 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் அவர் டெல்லி வந்தபோது தேசிய புலனாய்வு அமைப்பான என்.ஐ.ஏவிடம் சிக்கினார்.

அவரிடம் விசாரணை மேற்கொண்டதில் தமிழ்நாட்டில் ஐஎஸ் தீவிரவாத இயக்கத்திற்கு ஆதரவாக தனியாக ஒரு தீவிரவாத குழு உருவாகி இருப்பது தெரியவந்தது.

அந்த குழுவில் தமிழ்நாட்டைச் சேர்ந்த 9 இளைஞர்கள் முக்கிய அங்கம் வகிப்பதும் தெரியவந்தது. அவர்களை தமிழக காவல்துறை ரகசியமாக தேடி வந்தனர். அதன் பயனாக அப்துல்லா, முத்தலீப், சாகுல்அமீது, அன்சார் மீரான் ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.

எஞ்சிய 5 பேரை என்.ஐ.ஏ மற்றும் தமிழக உளவுத்துறை அதிகாரிகளும் தொடர்ந்து தேடி வருகின்றனர்.

தற்போது தலைமறைவாக இருக்கும் 5 பேரும் ஐஎஸ் தீவிரவாத அமைப்புக்கு தொடர்ந்து நிதி திரட்டி வருவதை தேசிய புலனாய்வு முகமையினர் கண்டுபிடித்துள்ளனர்.

கன்னியாகுமரி மாவட்டம் திருவிதாங்கேடு பகுதியைச் சேர்ந்த அன்சார் மீரான் சென்னையில் டிராவல்ஸ் நிறுவனம் நடத்தி, அதில் இருந்தபடியே ஐஎஸ் தீவிரவாத அமைப்புக்கு நிதி திரட்டி கொடுத்துள்ளார்.

மேலும் ஐஎஸ் தீவிரவாத இயக்கத்திற்கு ஆதரவாக சிரியா செல்பவர்களுக்கு விமான டிக்கெட்டும் எடுத்து கொடுத்துள்ளார். காஜா பக்ருதீன் சிரியா செல்ல டிக்கெட் எடுத்து கொடுத்ததும் இவர்தான் என்பதும் அம்பலமானது.

இதனிடையே ஐஎஸ் அமைப்பினர் தெற்காசிய நாடுகளில் தொடர் தாக்குதல் நடத்த திட்டமிட்டு இருப்பதாக இந்திய உளவுத்துறை கண்டறிந்து, தமிழகம் உட்பட பிற மாநிலங்களுக்கும் எச்சரிக்கை விடுத்துள்ளது.

இலங்கையில் குண்டு வெடிப்பு நிகழ்ந்த நிலையில், அதில் தொடர்புடைய ஜக்ரான் ஹாசிம், ஹஸன் உட்பட சில தீவிரவாதிகள் தமிழகத்துக்கு வந்து சென்றிருப்பதும் உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதனால் ஐஎஸ் தீவிரவாத இயக்கத்துக்கு உதவி செய்யும் நபர்கள் தமிழகத்தில் அதிகமாக இருப்பதை தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் கண்டுபிடித்துள்ளனர்.

அவர்களை உடனே கைது செய்யும் முயற்சியில் தற்போது ஈடுபட்டுள்ளனர். இதற்காக ஏற்கனவே கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ள ஐஎஸ் தீவிரவாத ஆதரவாளர்களிடம் மீண்டும் விசாரணை நடத்த முடிவு செய்துள்ளனர்.

தமிழகம் உட்பட தென்னிந்தியாவில் ஐஎஸ் அமைப்பினர் தாக்குதல் நடத்தக்கூடும் என்று தென்னிந்திய மாநிலங்களை இந்திய உளவுத்துறை கடந்த ஒரு வாரத்தில் 2 முறை எச்சரித்துள்ளது.

இதனால் தமிழகம் முழுவதும் பாதுகாப்பை பலப்படுத்த ஆயத்த நடவடிக்கைகள் முடுக்கிவிடப்பட்டுள்ளது.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்