இலங்கையில் தாக்குதல் நடத்திய கோடீஸ்வர சகோதரர்கள் சென்னைக்கு முன்னர் வந்தனர்! எதற்காக? உறுதியான தகவல்

Report Print Raju Raju in இந்தியா

இலங்கை குண்டுவெடிப்பில் தொடர்புடைய இரண்டு தாக்குதல்தாரிகள் கடந்த 2012-ல் முறையான ஆவணங்களுடன் இந்தியாவின் பல்வேறு நகரங்களுக்கு வந்தது தெரியவந்துள்ளது.

இது தொடர்பான தகவலை இந்திய புலனாய்வு துறையினர் வெளியிட்டதோடு, இது உறுதியான தகவல் என்றும் தெரிவித்துள்ளனர்.

இது தொடர்பான செய்தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் பத்திரிக்கையில் வெளியாகியுள்ளது.

இலங்கையில் ஈஸ்டர் தினத்தில் 8 இடங்களில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 253 பேர் கொல்லப்பட்டனர்.

இந்த தற்கொலைப்படை தாக்குதலை நடத்தியவர்களில் இல்ஹாம் அகமது மற்றும் இன்ஷாப் அகமது ஆகிய சகோதரர்களும் அடக்கமாவார்கள்.

இருவரும் கோடீஸ்வர தொழிலதிபர் முகமது இப்ராஹிமின் மகன்கள் ஆவார்கள்.

தாக்குதலுக்கு உதவியதாக கூறப்பட்ட இப்ராஹிம் ஏற்கனவே கைது செய்யப்பட்டுள்ளார்.

இந்நிலையில் இல்ஹாம் அகமது மற்றும் இன்ஷாப் ஆகியோர் கடந்த 2012-ல் முறையான பயண ஆவணங்கள், பாஸ்போர்ட்களுடன் இந்தியாவுக்கு வந்ததாக இந்திய புலனாய்வு துறையினர் தெரிவித்துள்ளனர்.

அதன்படி சென்னை, பெங்களூர், கொச்சி, மும்பை, டெல்லி உள்ளிட்ட நகரங்களுக்கு தொழில்முறை விடயமாக இருவரும் வந்துள்ளனர்.

முகமது இப்ராஹிமின் நிறுவனம் இந்தியாவில் தொழில் செய்ய விரும்பிய நிலையில் அது தொடர்பாகவே இல்ஹாம் அகமதும், இன்ஷாப்பும் இந்தியா வந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இருவரும் இந்தியாவில் எந்தவொரு தீவிரவாத பயிற்சியும் எடுக்கவில்லை என்றும் புலனாய்வு துறையினர் கூறியுள்ளனர்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்