மகளின் காதலுக்கு உடந்தையாக இருந்த தாய்க்கு நேர்ந்த கதி... விசாரணையில் வெளியான திடுக்கிடும் தகவல்

Report Print Santhan in இந்தியா

தமிழகத்தில் மகளின் காதலுக்கு உடந்தையாக இருந்த மனைவியை கணவன் கொடூரமாக வெட்டி கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

நெல்லை மாவட்டம் புளியங்குடி அருகே உள்ள நெற்கட்டும்செவல் பகுதியை சேர்ந்தவர் சுப்பையா மகன் சமுத்திர பாண்டி (35). இவருக்கு வெள்ளதுரைச்சி (39) என்ற மனைவி உள்ளார்.

இவர் தனது கணவரை விட மூத்தவர் ஆவார். இவர்களுக்கு 2 மகள்கள் உள்ளனர். இதில் மூத்த மகள் சிவரஞ்சனி (17).

கர்நாடக மாநிலத்தில் டவர் அமைக்கும் தொழிலாளியாக வேலை செய்து வந்த சமுத்திர பாண்டி கடந்த மாதம் ஊருக்கு வந்துள்ளார்.

அப்போது கடந்த சில நாட்களாக கணவன்-மனைவி இடையே அடிக்கடி குடும்ப பிரச்சினை தொடர்பாக தகராறு ஏற்பட்டு வந்துள்ளது.

இந்த நிலையில் நேற்று பகலில் சமுத்திர பாண்டி, வெள்ளதுரைச்சி, சிவரஞ்சனி ஆகியோருக்கும் இடையே தகராறு ஏற்பட, இதில் ஆத்திரம் அடைந்த சமுத்திரபாண்டி வீட்டில் உள்ள அரிவாளால் வெள்ள துரைச்சியை சரமாரியாக வெட்டினார்.

அதை தடுத்த மகள் சிவரஞ்சனியையும் வெட்டியுள்ளார். அதன் பின்னர் சமுத்திர பாண்டி அங்கு இருந்து தப்பி ஓடிவிட்டார்.

அரிவாள் வெட்டில் பலத்த காயம் அடைந்த வெள்ளதுரைச்சி சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் துடிதுடித்து பரிதாபமாக இறந்தார்.

சிவரஞ்சனி உயிருக்கு போராடிக் கொண்டு இருந்தார். அலறல் சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தினர் வீட்டிற்கு ஓடிவந்தனர். அங்கு 2 பேரும் ரத்த வெள்ளத்தில் கிடந்ததை பார்த்து அதிர்ச்சியடைந்து, உடனடியாக பொலிசாருக்கு தகவல் தெரிவித்துள்ளனர்.

சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த பொலிசார் அங்கு உயிருக்கு போராடிக் கொண்டு இருந்த சிவரஞ்சனியை மீட்டு சிகிச்சைக்காக புளியங்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது.

பின்னர் மேல்சிகிச்சைக்காக அவர் நெல்லை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. பிணமாக கிடந்த வெள்ளதுரைச்சியின் உடலை பொலிசார் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக புளியங்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இந்த பயங்கர கொலை குறித்து புளியங்குடி பொலிசார் விசாரணை நடத்திய போது, சில திடுக்கிடும் தகவல்கள் வெளியாகின.

சமுத்திர பாண்டி மகள் சிவரஞ்சனி அதே பகுதியைச் சேர்ந்த ஆட்டோ டிரைவர் ஒருவரை காதலித்து வந்துள்ளார்.

இதுகுறித்து அவர் தனது தாயார் வெள்ளதுரைச்சியிடம் தெரிவித்துள்ளார். அவர் தனது மகளின் காதலுக்கு சம்மதம் தெரிவித்தார். இது வெளியூரில் இருந்த சமுத்திர பாண்டிக்கு முதலில் தெரியவில்லை. இதையடுத்து கடந்த மாதம் விடுமுறைக்காக ஊருக்கு வந்த சமுத்திர பாண்டிக்கு தனது மகளின் காதல் விவகாரம் தெரிய வந்தது.

மேலும் இந்த காதலுக்கு தனது மனைவி உடந்தையாக இருந்ததும் தெரிந்தது. இதனால் அவர் அதிர்ச்சி அடைந்தார். தனது மகளின் காதலுக்கு சமுத்திர பாண்டி கடும் எதிர்ப்பு தெரிவித்தார். இதனால் கடந்த சில நாட்களாக குடும்பத்தில் கணவன்-மனைவிக்கு இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு உள்ளது.

இந்த நிலையில் நேற்று பகலில் இந்த பிரச்சினை தொடர்பாக சமுத்திரபாண்டியிடம் வெள்ளதுரைச்சி, சிவரஞ்சனி ஆகியோர் பேசினார்கள். அப்போது, ஏற்பட்ட தகராறில் ஆத்திரம் அடைந்த சமுத்திரபாண்டி 2 பேரையும் அரிவாளால் வெட்டியது தெரியவந்தது.

இந்த நிலையில் தப்பி ஓடிய சமுத்திரபாண்டி நேற்று இரவு புளியங்குடி காவல நிலையத்தில் சரண் அடைந்தார். அவரிடம் பொலிசார் தொடர்ந்து விசாரணைக்கு மேற்கொண்டு வருகின்றனர்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்