பத்து நாட்களுக்கு முன்னரே தோண்டப்பட்ட குழி... கணவர், குழந்தையை கொன்று புதைத்த இளம் மனைவி வழக்கில் பகீர் தகவல்

Report Print Raju Raju in இந்தியா

தமிழகத்தில் கணவர், குழந்தையை கொன்று புதைத்த பெண் 10 நாட்களுக்கு முன்னரே அவர்களை புதைக்க குழியை தோண்டியது தெரியவந்துள்ளது.

வேலூர் மாவட்டத்தை சேர்ந்தவர் ராஜா (25). இவர் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்னர் தீபிகா (19) என்ற பெண்ணை காதல் திருமணம் செய்து கொண்ட நிலையில் தம்பதிக்கு பிரவீன்குமார் (1) என்ற குழந்தை உள்ளது.

கடந்த 13ம் திகதி முதல் ராஜாவும், பிரவீன்குமாரும் காணாமல் போனார்கள். இதுகுறித்து தீபிகா அங்குள்ளவர்களிடம் கூறி உள்ளார். இந்த தகவல் ராஜாவின் சகோதரிகளுக்கு தெரியவந்தது. உடனே ராஜா வீட்டுக்கு வந்து தீபிகாவிடம் விசாரித்தனர். வீட்டில் ரத்தக்கறை போல இருக்கிறதே என கேட்டுள்ளனர்.

அதற்கு தீபிகா ஏன் வீணாக சந்தேகப்படுகிறீர்கள்? ரத்தக்கறை இல்லை என்று கூறி சமாளித்தார். ஆனால், அவர்களின் சந்தேகம் தீரவில்லை. இதனால் பொலிசில் புகார் செய்தனர்.

இதையடுத்து பொலிசார் தீபிகாவிடம் விசாரித்தனர். அப்போது, 12ம் திகதி கணவருடன் சண்டை ஏற்பட்டதாகவும், அன்று இரவு ராஜா வீட்டில் தூங்கும்போது கணவன் தலையில் கல்லைபோட்டு கொலை செய்து புதைத்ததாகவும் பரபரப்பு வாக்குமூலம் அளித்தார்.

பின்னர், புதைத்த இடத்தை தீபிகா பொலிசாரிடம் காண்பித்தார். இதையடுத்து அவரை பொலிசார் கைது செய்தனர்.

தீபிகா அளித்த வாக்குமூலம் குறித்து பொலிசார் கூறுகையில், ராஜாவுக்கு குடிப்பழக்கம் இருந்தது. 12ம் திகதி குடிபோதையில் மனைவியுடன் தகராறில் ஈடுபட்டுள்ளார்.

இதனால் ஆத்திரமடைந்த தீபிகா அன்று இரவு தூங்கும்போது கணவனின் தலையில் கல்லை தூக்கி போட்டு கொலை செய்துள்ளார். அந்த சத்தம் கேட்டு குழந்தை எழுந்து அழுதுள்ளது.

கணவரை கொலை செய்தது பொலிசில் தெரிந்தால், தான் சிறைக்கு செல்ல நேரிடும். இதனால், தனது குழந்தையை கொலைக்காரியின் மகன் எனக் கூறுவார்கள் என்று கருதி தனது குழந்தையை துப்பட்டாவால் கழுத்து நெரித்து கொலை செய்து உள்ளார். பின்னர் சடலங்களை வீட்டின் அருகே புதைத்துள்ளார் என பொலிசார் கூறியுள்ளனர்.

இதனிடையே, ராஜா மற்றும் பிரவீன்குமார் சடலங்கள் தோண்டியெடுக்கப்பட்டு பிரேத பரிசோதனை செய்யப்பட்டது.

கணவரையும், மகனையும் கொலை செய்த தீபிகா ஒருவரே எப்படி 2 பேரின் சடலத்தையும் கொண்டு வந்து புதைத்திருக்க முடியும். எனவே, இதற்கு வேறு யாராவது உடந்தையாக இருந்தனரா? என்ற கோணத்தில் பொலிசார் விசாரணையை தீவிரப்படுத்தினர். இதன்படி, ராஜாவின் நண்பர் ஜெயராஜ் என்பவரிடம் விசாரித்து வருகின்றனர்.

மேலும், கடந்த ஒரு ஆண்டுக்கு முன்பு இவர்களின் திருமணம் நடந்து சிறிது நாளில் ராஜாவின் தந்தையான சுப்பிரமணி இறந்தார். அதன்பிறகு, 2 நாட்களில் அவரது மனைவியான நிர்மலாவும் உயிரிழந்திருக்கிறார். இதற்கும் தீபிகாதான் காரணமாக இருக்கும் என்று ராஜாவின் சகோதரிகள் கூறினர்.

ஏனெனில், தீபிகாவிற்கு வேறொருவருடன் கள்ளத்தொடர்பு உள்ளது என்றும் ராஜாவின் சகோதரிகள் குற்றம்சாட்டினர்.

இதோடு தீபிகா 10 நாட்களுக்கு முன்பே வீட்டின் அருகில் பள்ளம் தோண்டி வைத்திருந்தார்.

எனவே கணவன் மற்றும் மகனை தீபிகா திட்டமிட்டு கொலை செய்து புதைத்துள்ளதாக கூறப்படுகிறது.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்