தேர்தல் முடிவுகள் வரும் முன்பே எம்.பி என கல்வெட்டா? கோயில் நிர்வாகி கைது!

Report Print Kabilan in இந்தியா

தமிழகத்தில் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்தின் மகன் ரவீந்திரநாத் குமாரின் பெயர், நாடாளுமன்ற உறுப்பினர் என்ற அடைமொழியுடன் கல்வெட்டில் பொறிக்கப்பட்ட விவகாரத்தில் கோயில் நிர்வாகி கைது செய்யப்பட்டுள்ளார்.

தேனி மாவட்டம் குச்சனூரில் உள்ள கோவில் ஒன்றில், ராஜகோபுர கும்பாபிஷேகத்தை ஒட்டி கல்வெட்டு அமைக்கப்பட்டுள்ளது. அதில் பேருதவி புரிந்தவர்கள் என மறைந்த தமிழக முதல்வர் ஜெயலலிதா, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் ஓ.பன்னீர்செல்வத்தின் மகன் ஓ.பி.ரவீந்திரநாத் குமார் ஆகியோர் பெயர்கள் பொறிக்கப்பட்டுள்ளன.

இதில் ரவீந்திரநாத் குமாரின் பெயருக்கு முன் தேனி நாடாளுமன்ற உறுப்பினர் என கல்வெட்டில் பொறிக்கப்பட்டிருந்தது. இதனைத் தொடர்ந்து தேர்தல் முடிவுகள் வெளியாகும் முன்பே எப்படி இவ்வாறு நாடாளுமன்ற உறுப்பினர் என்று பொறிக்கலாம் என சர்ச்சை எழுந்தது.

அதன் பின்னர் கல்வெட்டை அகற்ற வேண்டும் என்று கோரிக்கை விடுக்கப்பட்டது. இந்நிலையில், இவ்விவகாரம் தொடர்பாக குச்சனூர் கோயில் நிர்வாகி வேல்முருகன் என்பவரை பொலிசார் கைது செய்துள்ளனர். இவர் ஒடைப்பட்டியைச் சேர்ந்த முன்னாள் காவலர் ஆவார்.

அ.தி.மு.க வழக்கறிஞர் அளித்த புகாரின் பேரில் இவர் மீது, சின்னமனூர் பொலிசார் 3 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்துள்ளதாக தெரிய வந்துள்ளது. வேல்முருகன் காவல்துறையின் கட்டுப்பாட்டை தொடர்ந்து மீறியதால், 2 ஆண்டுகளுக்கு முன்பு அவருக்கு கட்டாய ஓய்வு அளிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers