தமிழகத்தில் 4 ஆண்டுகளில் 260 குழந்தைகள் மாயம்? விசாரணையில் தெரிய வந்த உண்மைகள்....!

Report Print Abisha in இந்தியா

தமிழகத்தில் தொடர்ந்து நான்கு ஆண்டுகளாக குழந்தை கடத்தலில் ஈடுபட்டுவந்த கும்பல் ஒன்று பிடிபட்டுள்ளது.

தமிழகத்தில், நாமக்கல் மாவட்டம் ராசிபுரத்தில் சட்ட விரோதமாக குழந்தைகள் விற்பனை செய்யப்பட்டது தொடர்பாக விருப்ப ஓய்வுபெற்ற செவிலியர் உதவியாளர் அமுதவள்ளி உள்பட 10 பேர் கைது செய்யப்பட்டு, சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.

இவர்கள் அனைவரும் ஒரு நெட்வொர்க்போல செயல்பட்டு வந்துள்ளனர்.

சில தினங்களாக தமிழகத்தில் குழந்தை கடத்தல் தொடர்பான கைது நடிவடிக்கைகள் நடைபெற்று வருகின்றது. இந்த சம்பவம் தொடர்பாகஇதுவரை 10பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இவர்களில் புரோக்கர்கள் லீலா, செல்வி மற்றும் அருள்சாமி ஆகிய 3 பேரையும் ஜாமீனில் விடுவிக்கக்கோரி நாமக்கல் மாவட்ட முதன்மை கோர்ட்டில் மனுதாக்கல் செய்யப்பட்டு இருந்தது.

இந்த மனு மீதான விசாரணை மாவட்ட முதன்மை நீதிபதி இளவழகன் முன்னிலையில் நடைபெற்றது. அரசு தரப்பில் வக்கீல் தனசேகரனும், புரோக்கர்கள் தரப்பில் வக்கீல் நல்லசிவனும் வாதாடினர்.இருதரப்பு வாதங்களையும் கேட்டறிந்த நீதிபதி இளவழகன் புரோக்கர்கள் 3 பேரின் ஜாமீன் மனுக்களையும் தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.

இந்த நிலையில் இந்த வழக்கு தொடர்பாக சி.பி.சி.ஐ.டி. போலீஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இதில், ஈரோட்டை சேர்ந்த புரோக்கர்கள் அருள்சாமி, ஹசீனா உள்ளிட்டோரிடம் சி.பி.சி.ஐ.டி. போலீஸார் நடத்திய விசாரணையில் குழந்தைகள் விற்பனை வழக்கில் பெங்களூருவை சேர்ந்த அழகுக்கலை நிபுணர் ரேகாவுக்கா என்பவருக்கும் தொடர்பு இருப்பது வெளியாகி உள்ளது.

மேலும், அவர் ஈரோட்டை சேர்ந்த புரோக்கர் அருள்சாமி மூலம் கொல்லிமலையில் பிறந்த 2 குழந்தைகளை வாங்கி விற்பனை செய்திருப்பதும் வெளிச்சத்துக்கு வந்துள்ளது.

இதையடுத்து ரேகாவையும் 18ஆம் திகதி சி.பி.சி.ஐ.டி. போலீஸார் கைது செய்தனர். அவரை 31ஆம் திகதி வரை நீதிமன்ற காவலில் வைக்க உத்தரவிடப்பட்டுள்ளது.

மேலும், கருமுட்டை தானம் பெற்றுக்கொடுப்பதில் ஈரோட்டை சேர்ந்த புரோக்கர்களுக்கும், ரேகாவுக்கும் தொடர்பு இருந்ததாகவும், அதன் அடிப்படையிலேயே குழந்தைகளையும் விற்பனை செய்து இருப்பதாகவும் சி.பி.சி.ஐ.டி. போலீஸார் தெரிவித்துள்ளனர்.

இதுபற்றி காவல்துறை வட்டாரத்தில் பேசியபோது, 260 குழந்தைகள் இதுவரை விற்பனை செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

நாமக்கல் மாவட்டத்தில் கடந்த 4 ஆண்டுகளில் 4,300 குழந்தைகள் பிறந்திருப்பதும், இதில் 260 குழந்தைகளின் நிலை என்ன என்பது தெரியவில்லை என்றும் சுகாதாரத்துறை அதிகாரிகள் அறிக்கை கொடுத்துள்ளதாகத் தெரிய வந்துள்ளது.

இதனால் அந்த 260 குழந்தைகளும் விற்பனை செய்யப்பட்டதா அல்லது அவர்கள் வேறு இடத்திற்கு குடிபெயர்ந்து விட்டார்களா என்பது குறித்து சி.பி.சி.ஐ.டி. போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும், இதில் வேறு யாரேனும் இதற்கு பின்புலமாக செயல்பட்டுள்ளனரா என்ற சந்தேகமும் எழுந்துள்ளது.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்