வாகனங்களை நிறுத்தி துப்பாக்கிச்சூடு நடத்திய ரவுடி கும்பல்... பொலிசார் சுட்டதில் ஒருவர் பலி! பதற வைக்கும் அதிர்ச்சி வீடியோ

Report Print Kabilan in இந்தியா

இந்தியாவின் டெல்லி நகரில் சாலையில் ரவுடி கும்பல் துப்பாக்கிச் சண்டையில் ஈடுபட்டதில் 2 பேர் பலியான சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

டெல்லியின் மேற்கு பகுதியில் உள்ள நஜாஃப்கர் சாலை எப்போதும் பரபரப்பாக இயங்கிக் கொண்டிருக்கும். இந்த சாலையில், நேற்றைய தினம் கருப்பு நிற கார் ஒன்றில் பயணித்த கும்பல், முன்னே சென்று கொண்டிருந்த வெள்ளை நிற காரை விரட்டிச் சென்றது.

இதனால் சாலையில் சென்ற மற்ற வாகன ஓட்டிகள் அதிர்ச்சியடைந்தனர். ஒரு கட்டத்தில் குறித்த கருப்பு நிற கார், வெள்ளை காரை மறித்து நின்றது. அந்த காரில் இருந்து இறங்கிய மூன்று பேர், சாலையில் இருந்த மற்ற வாகனங்களை அப்படியே நிற்குமாறு கூறிவிட்டு, வெள்ளை காரில் இருந்தவரை நோக்கி துப்பாக்கியால் சரமாரியாக சுட்டுள்ளார்.

பதிலுக்கு அவரும் துப்பாக்கியால் சுட, சர சரவென குண்டுகள் பாய்ந்த சத்தத்தைக் கேட்டு அங்கிருந்தவர்கள் அலறியடித்து ஓடியுள்ளனர். இதற்கிடையில் இது குறித்து தகவல் அறிந்த பொலிசார் ஒருவர் அங்கு விரைந்தார். ரவுடி கும்பலில் இருந்த ஒருவன் பொலிசை சுட்டதால், பதிலுக்கு அவரும் சுட்டார்.

இதில் ஒரு ரவுடி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். அதனைத் தொடர்ந்து அந்த கும்பல் தப்பியோடிவிட்டது. பின்னர் வெள்ளை காரில் பார்த்தபோது, அதில் இருந்த நபர் சாய்ந்தபடியே ரத்த வெள்ளத்தில் உயிரிழந்திருந்தார்.

இச்சம்பவத்தில் உயிரிழந்த இருவரின் உடல்களைக் கைப்பற்றிய பொலிசார், மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்நிலையில் இச்சம்பவம் குறித்து பொலிசார் கூறுகையில், ‘வெள்ளை காரில் சென்றவன் பிரவீன் கெலாட். இவன் மீது கொலை, கொள்ளை என பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளன.

சமீபத்தில்தான் சிறையில் இருந்து வெளியே வந்திருந்தான். பொலிசாரால் சுடப்பட்டவன் விகாஸ் தலால். இவன், ஹரியானா பொலிசிடம் இருந்து தப்பி, கோவாவில் தலைமறைவாக வாழ்ந்து வந்தான். இவனைப் பிடிப்பதற்கு பரிசு அறிவிக்கப்பட்டிருந்தது. கொல்லப்பட்ட பிரவீனும் தலாலும் ஒரு காலத்தில் மஞ்சீத் மஹல் என்ற தாதாவிடம் இருந்தவர்கள்.

மஹல், இப்போது சிறையில் இருக்கிறான். ஹரியானாவில் ஒரு இடத்துக்கான கட்டப்பஞ்சாயத்து பிரச்சனையில் பிரவீனுக்கும் தலாலுக்கும் மோதல் ஏற்பட்டது. நண்பர்கள் எதிரிகளாயினர். இருவரும் ஒருவரையொருவர் கொல்ல நேரம் பார்த்துக்கொண்டிருந்தனர்.

அப்போதுதான் டெல்லியில், பிரவீன் தனியாகச் சுற்றி வருவது தலாலுக்குத் தெரிய வந்தது. கோவாவில் இருந்து பிரவீனை போட்டுத்தள்ளுவதற்காக டெல்லி வந்தான் தலால். பிறகு நடந்ததுதான் இந்த மோதல். இதில் இரண்டு பேருமே கொல்லப்பட்டுவிட்டனர்’ என தெரிவித்துள்ளனர்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers