இந்திராகாந்தியைப் போல் நான் கொல்லப்பட வேண்டும் என்று மோடி விரும்புகிறார்! டெல்லி முதல்வர் பரபரப்பு குற்றச்சாட்டு

Report Print Kabilan in இந்தியா

தான் கொல்லப்பட வேண்டுமென பிரதமர் மோடி விரும்புவதாக டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் பரபரப்பு குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார்.

இந்தியாவின் தலைநகர் டெல்லியில் காவல்துறை மத்திய உளவுத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ளது. இவ்விவகாரம் தொடர்பாக ஆம் ஆத்மி தலைமையிலான அரசுக்கும், மத்திய அரசுக்கும் இடையே தொடர்ச்சியாக மோதல் போக்கு நிலவி வருகிறது.

டெல்லியில் காவல் உதவி ஆய்வாளர் விவேக் விஹார் நேற்றிரவு கொல்லப்பட்டார். இதற்கு கண்டனம் தெரிவித்த டெல்லி முதல்வர் கெஜ்ரிவால், தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் டெல்லி மக்களின் பாதுகாப்புக்கு யார் பொறுப்பேற்பது என்று கேள்வி எழுப்பியிருந்தார்.

மேலும், டெல்லி முதல்வர் கெஜ்ரிவால், காவல்துறையை டெல்லி அரசின் கட்டுப்பாட்டில் விட்டுவிடுமாறு வலியுறுத்தி வருகிறார். இவ்விவகாரம் தொடர்பாக பா.ஜ.க மூத்த தலைவரும், மத்திய அமைச்சருமான விஜய் கோயலுக்கும், அரவிந்த் கெஜ்ரிவாலுக்கும் இடையே ட்விட்டரில் கருத்து மோதல் ஏற்பட்டுள்ளது.

கெஜ்ரிவாலுக்கு பதிலளிக்கும் வகையில் மத்திய அமைச்சர் விஜய் கோயல் கூறுகையில், ‘உங்களது சொந்த பாதுகாவலர்கள் மீதே சந்தேகத்தை எழுப்புவது வருத்தமாக உள்ளது. டெல்லி காவல்துறைக்கு தவறான பெயரினை கொடுக்காதீர்கள்.

உங்களது தனிப்பட்ட பாதுகாவலர்களை தேவைப்பட்டால் நீங்களே தெரிவு செய்துகொள்ளலாம். உங்களுக்கு ஏதேனும் உதவி தேவையென்றால் தெரியப்படுத்துங்கள். நீங்கள் நீண்ட ஆயுள் வாழ வாழ்த்துகிறேன்’ என தெரிவித்தார்.

அதற்கு தனது ட்விட்டர் பக்கத்தில் பதிலளித்த கெஜ்ரிவால் கூறுகையில், ‘விஜய் ஜி, என்னுடைய பாதுகாப்பு காவலர் அல்ல, நான் கொல்லப்பட வேண்டும் என மோடிதான் விரும்புகிறார்’ என தெரிவித்துள்ளார்.

அத்துடன், இந்தியாவின் முன்னாள் பிரதமர் இந்திரா காந்தியைப் போல், தான் கொல்லப்பட வேண்டும் என்று மோடி விரும்புவதாக அவர் குறிப்பிட்டுள்ளார். இந்த விடயம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers