தமிழகத்தில் முதன் முறையாக ஆண்-திருநங்கை திருமணம் சட்டப்படி பதிவு! மகிழ்ச்சியாக மோதிரம் அணிவித்து கொண்ட ஜோடி

Report Print Santhan in இந்தியா

தமிழகத்தில் முதல் முறையாக ஆண் - திருநங்கை திருமணம் சட்டப்படி பதிவு செய்யப்பட்டுள்ளது.

தூத்துக்குடி தாளமுத்து நகர் பகுதியில் உள்ள தாய்நகரைச் சேர்ந்தவர் பா.அருண்குமார் (23). டிப்ளமோ படித்துள்ள இவரும், தூத்துக்குடி வஉசி கல்லூரியில் பி.ஏ. ஆங்கில இலக்கியம் படித்து வரும் பி.ஸ்ரீஜா (21) என்ற திருநங்கையும் காதலித்து வந்துள்ளனர்.

இதையடுத்து இருவரும் கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் 31-ஆம் திகதி தூத்துக்குடி சிவன் கோவிலில் திருமணம் செய்ய வந்தனர்.

ஆனால், இந்து திருமண சட்டப்படி ஆணும், திருநங்கையும் திருமணம் செய்ய முடியாதுஎனக்கூறி, இவர்களது திரு மணத்தை பதிவு செய்ய கோயில் நிர்வாகம் மறுத்துவிட்டதாகக் கூறப்படுகிறது. அதன் பின்னர், பொலிசாரின் தலையீட்டின் பேரில், அங்குள்ள சந்நிதி முன்பு தாலி மட்டும் கட்டிக்கொண்டனர்.

இதையடுத்து, மாவட்ட பதிவாளர் அலுவலகத்தை இருவரும் அணுகினர். ஆனால், அங்கும், அவர்களது திருமணத்தை பதிவு செய்ய மறுத்துவிட்டனர். மாவட்ட ஆட்சியர், மாவட்ட காவல் கண்காணிப்பாளரை சந்தித்து முறையிட்டும் எந்தத் தீர்வும் ஏற்படவில்லை.

இதனால் அடுத்தகட்டமாக, தங்களது திருமணத்தை பதிவு செய்ய உத்தரவிடக் கோரி உயர் நீதிமன்ற மதுரை கிளையில், இருவரும் மனுத்தாக்கல் செய்தனர். இந்த மனுவை விசாரித்த நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன், திருநங்கைகளும் சக மனிதர்கள்தான். எனவே, அவர்களது திருமணத்தை முறைப் படி பதிவு செய்ய வேண்டும் என உத்தரவிட்டார்.

இதன் அடிப்படையில் அருண்குமார்- ஸ்ரீஜா திருமணத்தை, தூத்துக்குடி மாவட்ட பதிவாளர் அலுவலகத்தில் இணை சார்பதிவாளர் வித்யா நேற்று பதிவு செய்தார். அங்கு இருவரும் மாலை மாற்றி, மோதிரம் அணிவித்துக் கொண்டனர்.

அருண்குமார்- ஸ்ரீஜா கூறும் போது, தமிழகத்திலேயே முதல்முறையாக ஆண்- திருநங்கை திருமணத்தை அரசு அங்கீகரித்து பதிவு செய்திருப்பது மகிழ்ச்சியளிக்கிறது என்று கூறியுள்ளனர்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers