மோடி அரசை திணற வைக்கப்போகும் தமிழக எம்பிக்கள் இவர்கள் தான்

Report Print Vijay Amburore in இந்தியா

ஒரு தொகுதியில் கூட பாஜகவை வெற்றி பெற விடாமல், சிறந்த சிந்தனையாளர்களையும், எழுத்தாளர்களையும் வெற்றி பெற வைத்திருப்பதன் மூலம் இந்தியாவின் கவனத்தை தன் பக்கம் திருப்பியுள்ளது தமிழகம்.

இந்தியாவின் பல மாநிலங்களில் மத்தியில் ஆளும் பாஜக அரசு முன்னிலை வகித்தாலும், அவர்களுக்கு கடும் எதிர்வினையாற்றக்கூடிய தமிழகத்தில் ஒரு தொகுதியில் கூட வெற்றி பெற முடியவில்லை.

பணம் மற்றும் கவர்ச்சி அறிவிப்புகளால் மட்டுமே வாக்குகளை வழங்கி வந்த தமிழகம் இந்த முறை, அதற்கு அப்படியே மாறாக சிந்தனையாளர்களையும், எழுத்தாளர்களையும் மதித்து அதிக வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற வைத்திருக்கிறது.

திமுக சார்பில் தூத்துக்குடி தொகுதியில் வெற்றி பெற்ற கனிமொழி பெண்களுக்கான முன்னேற்றம், திருநங்கைகளின் உரிமைகள் என பலவற்றிற்காக நாடாளுமன்றத்தில் குரலெழுப்பியவர்.

திமுக சார்பில் தென்சென்னையில் வெற்றி பெற்ற தமிழச்சி தங்கபாண்டியன், எஞ்சோட்டுப் பெண், வனப்பேச்சி, பேச்சரவம் கேட்டிலையோ, மஞ்சணத்தி உள்ளிட்ட கவிதை நூல்களையும், கட்டுரைகளையும் எழுதி இருக்கிறார்.

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் மதுரை தொகுதியில் வெற்றி பெற்ற வெங்கடேசன், காவல் கோட்டம் என்கிற தன்னுடைய முதல் நாவலுக்காக சாகித்ய அகாடமி விருது பெற்றவர். வேள்பாரி, வைகை நதி நாகரிகம் என வரலாற்று நூல்களை எழுதியவர்.

அதோடு மட்டுமில்லாமல், கீழடி அகழ்வாய்வில் பாஜக ஆட்சியில் ஏற்பட்ட அரசியல் தலையீடுகளை உலக அரங்ககிற்கு எடுத்துச் சென்றவர்.

விடுதலை சிறுத்தைகள் கட்சியின் சார்பில் விழுப்புரம் தொகுதியில் வெற்றி பெற்ற ரவிக்குமார், தலித்தியம், ஈழம், பெண்ணியம், சூழலியல் என பல கட்டுரைத் தொகுப்புகளை படைத்தவர்.

காங்கிரஸ் சார்பில் கரூர் தொகுதியில் வெற்றி பெற்ற ஜோதிமணி, சித்திரக்கூடு, ஒற்றைவாசனை என்ற நாவல்களை படைத்தவர்.

விடுதலை சிறுத்தைகள் கட்சியின் சார்பில் சிதம்பரம் தொகுதியில் வெற்றி பெற்ற திருமாவளவனை பற்றி அறியாதவர்கள் அதிகம் இருக்கமாட்டார்கள். தமிழக பிரச்சனைகள் மற்றும் ஒடுக்கப்பட்ட மக்களுக்காக தொடர்ந்து குரல் கொடுத்து வருபவர். நாடாளுமன்றத்தில் தன்னுடைய உரையின் மூலம் அனைவரின் கவனத்தையும் ஈர்ப்பவர்.

தமிழகத்திலிருந்து படையெடுக்க உள்ள இத்தகைய எழுத்தாளர்களையும், சிந்தனையாளர்களையும் மோடி தலைமையிலான பாஜக எப்படி சமாளிக்கப்போகிறது என்பது தான் பெருத்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers