நாங்கள் வெற்றிபெறாததற்கு காரணம்.. தவறை திருத்திக்கொண்டு மக்களின் நம்பிக்கையை பெறுவோம்: அன்புமணி ராமதாஸ்

Report Print Kabilan in இந்தியா

நாங்கள் ஏதேனும் தவறு செய்திருந்தால் அதைத் திருத்திக்கொண்டு, வரும் தேர்தலில் நிச்சயமாக மக்களின் நம்பிக்கையைப் பெறுவோம் என அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

இந்தியாவில் நடந்த 17வது நாடாளுமன்றத் தேர்தலில், பா.ஜ.க 300க்கும் அதிகமான தொகுதிகளில் வெற்றி பெற்று தனிப்பெரும்பான்மையுடன் இரண்டாவது முறையாக ஆட்சி அமைக்க உள்ளது.

தமிழகத்தில் 39 தொகுதிகளில் தி.மு.க 38 தொகுதிகளைக் கைப்பற்றி, தேசிய அளவில் மூன்றாவது பெரிய கட்சியாக மாறியுள்ளது. ஆனால், அ.தி.மு.க மற்றும் அதன் கூட்டணி கட்சிகளான பா.ம.க, தே.மு.தி.க கட்சிகளின் வேட்பாளர்கள் எந்த தொகுதியிலும் வெற்றி பெறவில்லை.

துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வத்தின் மகன் மட்டுமே, அ.தி.மு.க சார்பில் தேனி போட்டியிட்டு வெற்றி பெற்றுள்ளார். பா.ம.கவின் அன்புமணி ராமதாஸ், தருமபுரி தொகுதியில் போட்டியிட்டு படுதோல்வியை சந்தித்துள்ளார்.

இந்நிலையில் இதுகுறித்து அவர் கூறுகையில், ‘நாடாளுமன்றத் தேர்தலில் வெற்றி பெற்ற மோடிக்கு, எங்கள் மனமார்ந்த வாழ்த்துக்களைத் தெரிவித்துக்கொள்கிறோம். நிச்சயமாக அவர் தலைமையிலான ஆட்சி, நாட்டை மேலும் வளப்படுத்தி, உலக அளவில் இந்தியாவை முன்னிலைப்படுத்தும் என்ற நம்பிக்கை உள்ளது.

நாங்கள் வெற்றி பெறாமல் போனதற்கான காரணம் குறித்து கட்சியினருடன் ஆலோசனை நடத்துவோம். தேர்தலில் நாங்கள் ஏதேனும் தவறு செய்திருந்தால், அதைத் திருத்திக்கொண்டு வரும் தேர்தலில் நிச்சயமாக மக்களின் நம்பிக்கையைப் பெறுவோம்.

தமிழ்நாட்டில் நல்ல திட்டம் கொண்டு வரவேண்டும் என்பதில் உறுதியாக உள்ளோம். தொடர்ந்து தருமபுரி மாவட்டத்தின் பிரச்சனைகளுக்காகக் குரல் கொடுப்போம். நான் கூறியதுபோல், காவிரி உபரி நீர் திட்டத்தை தருமபுரிக்குக் கொண்டு வர அழுத்தம் கொடுப்போம்’ என தெரிவித்துள்ளார்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்