2 குழந்தைகளை கொலை செய்தது ஏன்? கண்ணீர் மல்க வாக்குமூலம் கொடுத்த தாய்

Report Print Vijay Amburore in இந்தியா

சென்னையில் இரண்டு குழந்தைகளை கொலை செய்துவிட்டு தானும் தற்கொலை செய்ய முயன்ற தாய் கொலைக்கான காரணம் குறித்து பொலிஸாரிடம் வாக்குமூலம் கொடுத்துள்ளார்.

சென்னையை அடுத்து மதுராந்தகம் பகுதியில் வசித்து வருபவர் சைலஜா (29). இவருடைய கணவர் சிபிராஜ் கடந்த பிப்ரவரி மாதம் கல்லீரல் நோயால் உயிரிழந்துவிட்டார்.

இந்த நிலையில் சைலஜாவின் உறவினரான கேரளா மாநிலத்தை சேர்ந்த தினத் என்பவர் புதன்கிழமையன்று, சென்னையிலுள்ள வீட்டின் கதவை தட்டியுள்ளார். நீண்ட நேரமாகியும் கதவு திறக்கப்படாததால், சந்தேகமடைந்த அவர் ஜன்னல் வழியே எட்டி பார்த்துள்ளார்.

அப்போது சைலஜா மற்றும் அவருடைய இரண்டு குழந்தைகள் ஸ்ரீலட்சுமி (3), ஆதிதேஷ் (2) ஆகியோர் மயங்கிய நிலையில் தரையில் கிடந்துள்ளனர்.

இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த அவர் உடனடியாக பொலிஸாருக்கு தகவல் கொடுத்துள்ளார். அதன்பேரில் ஆம்புலன்ஸ் ஊழியர்களுடன் சம்பவ இடத்திற்கு விரைந்த வந்த பொலிஸார், பரிசோதனை மேற்கொண்ட போது குழந்தைகள் இருவரும் இருந்திருப்பது தெரியவந்தது.

அதேசமயம் உயிருக்கு போராடி கொண்டிருந்த சைலஜாவை வேகமாக மருத்துவமனைக்கு எடுத்து சென்று சிகிச்சை மேற்கொண்டனர்.

இந்த நிலையில் சைலஜா அன்று நடந்த சம்பவம் குறித்து கண்ணீர் மல்க வாக்குமூலம் கொடுத்துள்ளார். நானும் என்னுடைய கணவர் சிபிராஜூம் காதலித்து திருமணம் செய்துகொண்டோம்.

அந்த சமயத்தில் அவர் முதல் மனைவியுடன் பேசுவதை நிறுத்தியதாக என்னிடம் கூறியிருந்தார். நாங்கள் நல்ல ஆடம்பரமாக தான் சென்னையில் வாழ்ந்து வந்தோம்.

கடந்த சில மாதங்களுக்கு முன்பு அவருக்கு உடல்நிலை சரியில்லாமல் போனது. மருத்துவமனைக்கு சென்று பார்த்தபோது கல்லீரல் நோய் இருப்பது கண்டறியப்பட்டது.

அந்த சமயத்தில் தான் அவரை பற்றி பல அதிர்ச்சி தரும் தகவல்களை தெரிந்துகொண்டேன். அவர் முதல் மனைவியுடன் தொடர்ந்து போனில் பேசிக்கொண்டிருந்துள்ளார். அதேபோல நிறைய பெண்களுடன் பழக்கம் இருந்துள்ளது என்பது தெரியவந்தது.

அவர் இறந்த பிறகு கடன் வாங்கியவர்கள் என்னிடம் கேட்டு வந்தார்கள். நானும் கார், வீட்டிலிருந்த நகைகள் என அனைத்தையும் விற்று கடனை கட்டினேன். ஆனால் முழு கடன்களையும் என்னால் கட்டமுடியவில்லை. இரண்டு குழந்தைகளை வைத்துக்கொண்டு எப்படி வாழப்போகிறோம் என்கிற கேள்வியும் எனக்குள் எழுந்தது.

கேரளாவில் இருக்கும் சிபிராஜின் முதல் மனைவிக்கு நானும் குழந்தைகளும் தற்கொலை செய்துகொள்ளப்போவதாக எஸ்.எம்.எஸ். அனுப்பினேன். அதனை பார்த்து அதிர்ச்சியடைந்த அவர், தவறான முடிவு எதுவும் எடுக்க வேண்டாம். உன்னையும் குழந்தைகளையும் நான் காப்பாற்றுகிறேன் கேரளவிற்கு உடனே புறப்பட்டு வருமாறு கூறினார்.

ஆனால் அவருக்கு சிரமம் கொடுக்க நான் விரும்பவில்லை. சிபிராஜின் கல்லீரல் சிகிச்சைக்காக கொடுக்கப்பட்ட மருந்தினை என்னுடைய குழந்தைகளின் வாயில் ஊற்றினேன். அவர்கள் நுரை தள்ளி மயங்கியதும், தூக்க மாத்திரங்களை நானும் சாப்பிட்டு படுத்துக்கொண்டேன்.

குழந்தைகளை கொன்ற பாவம் என்னை சும்மா விடாது. நான் சாக வேண்டும் என வாக்குமூலம் கொடுத்துள்ளார்.

இந்த சம்பவம் குறித்து பொலிஸார் கூறுகையில், சைலஜா மீது கொலை வழக்கு பதிவு செய்துள்ளோம். சிகிச்சை முடிந்த பின்னர் அவர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்படுவார் என தெரிவித்துள்ளனர்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்